இலங்கையில் எதிர்ப்பு: '800' படத்தில் இருந்து சர்ச்சை வார்த்தை நீக்கம்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், நட்சத்திர வீரருமான முத்தையா முரளிதரன் வாழ்க்கை '800' என்ற பெயரில் தயாராகி இருக்கிறது. எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கியுள்ள இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக மதுர் மிட்டல் நடித்துள்ளார். மஹிமா நம்பியார் அவரது மனைவியாக நடித்துள்ளார். இவர்கள் தவிர நாசர், யோக் ஜேப்பி, ரித்விகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்த டிரைய்லரில் 'குடியுரிமையே இல்லாத கொத்தடிமை கூட்டத்தில் இருந்து வந்தவங்களுக்கு குடிமகன்னு அங்கீகாரம் கிடைக்கிறதே கஷ்டம். இன்னைக்கு நாடே அண்ணாந்து பாக்குற அளவுக்கு ஒரு தோட்டக்காட்டான் வளந்துருக்கான்' என்று நாசர் பேசும் வசனம் இடம்பெற்றுள்ளது.

'தோட்டக்காட்டான்' என்பது இலங்கையில் வாழும் மலையகத் தமிழர்களை கிண்டலாக குறிக்கும் சொல். இது மலையக தமிழர்களை அவதூறு செய்வதாக அங்குள்ள தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த வார்த்தை நீக்கப்பட வேண்டும் என்றனர். இதுகுறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், '800' படத்தின் இயக்குனருக்கு கடிதம் எழுதினார்.

அதில், “கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தை எடுப்பதற்கு பாராட்டுகள். அதே வேளை '800' படத்தின் டிரெய்லரில் சர்ச்சைக்குரிய வகையில் இடம்பெற்றுள்ள 'தோட்டக்காட்டான்' என்ற வார்த்தையால், எங்கள் மலையக சமூகத்தினர் இடையே ஏற்பட்டுள்ள மன வருத்தத்தை எடுத்துரைக்க கடமைப்பட்டு உள்ளேன். இந்த வார்த்தை அவர்களிடையே சிறிய சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வார்த்தைக்கு பதிலாக 'மலையக தமிழன்' என்ற வார்த்தையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்'' என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதில் கடிதம் அனுப்பி உள்ள படத்தின் இயக்குனர் ஸ்ரீபதி, “மலையக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து '800' படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய வார்த்தை நீக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.