நாள் ஒன்றுக்கு 5,000 ரூபாய் வழங்க வேண்டும் : வங்கி கடனை செலுத்தியும் ஆவணத்தை தராவிட்டால் நடவடிக்கை| 5,000 per day should be paid : Action if the bank does not provide the loan payment document

மும்பை :கடனை முழுதுமாக திருப்பிச் செலுத்திய பிறகும், சம்பந்தப்பட்டவர்களின் சொத்து ஆவணங்களை தராமல் காலதாமதம் செய்யும் வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், கடன் பெற்றவர்களுக்கு, தாமதத்திற்கான அபராதத் தொகையாக, நாள் ஒன்றுக்கு 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது.
இது வருகிற டிசம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் சுற்றறிக்கையில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கடனை திருப்பிச் செலுத்தும் போது, கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளை கவனத்தில் கொள்ளும் வகையில், ரிசர்வ் வங்கி, வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
கடனை முழுதுமாக திருப்பிச் செலுத்திய உடன், கடன் பெற்றவர்களின் அனைத்து அசையும், அசையா சொத்து ஆவணங்களை முழுமையாக திருப்பி செலுத்த வேண்டும். ஆனால், அத்தகைய நடைமுறைகளை பின்பற்றுவதில் சில மாறுபட்ட நடைமுறைகளை வங்கிகள் உள்ளிட்ட பல நிதி நிறுவனங்கள் பின்பற்றுகின்றன. இது வாடிக்கையாளர்களின் குறைகள் மற்றும் தகராறுகளுக்கு வழி வகுக்கிறது. இதையடுத்து வாடிக்கையாளர்களின் நலன் கருதி, வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின் அடிப்படையில் புதிய வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சுற்றறிக்கை யில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாவது :
1 ஒழுங்குபடுத்தப்பட்ட அனைத்து நிதி சார் நிறுவனங்களும், கடன் தொகையை முழுதுமாக திருப்பி செலுத்திய உடன், கடன் பெற்றவர்களுக்கு அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்து ஆவணங்களின் அசலை திருப்பி செலுத்த வேண்டும். அல்லது தீர்வு செய்த 30 நாட்களுக்குள் ஆவணங்களை வழங்க வேண்டும்.
2கடன் பெற்றவருக்கு, அவருடைய அசல் சொத்து ஆவணங்களை, கடன் வழங்கிய வங்கி அல்லது அதன் கிளை அல்லது ஆவணங்கள் இருக்கும் அந்த வங்கியின் பிற அலுவலகங்களில் இருந்து பெற்றுக்கொள்ள அவரது விருப்பத்தின் அடிப்படையில் அனுமதி வழங்க வேண்டும்.
3கடன் வழங்கும் போது, கடன் அனுமதிக்கான கடிதத்தில், கடன் பெறுபவர்களின் அசையும் அல்லது அசையா சொத்துக்களின் ஆவணங்களை திரும்ப ஒப்படைக்கும் காலம், நேரம், இடம் உள்ளிட்டவை குறித்து குறிப்பிடப்பட வேண்டும்.
4கடன் பெற்றவர்களின் வாரிசுதாரர்களுக்கு அசையும் அல்லது அசையா சொத்து ஆவணங்களை திரும்ப அளிப்பதற்கு உண்டான நன்கு வரையறுக்கப்பட்ட நடைமுறைகளை கொண்டிருக்க வேண்டும். இதுபோன்ற நடைமுறைகள் குறித்த தகவல்களை ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்
களின் வலைதள பக்கங்களில் தெரிவிக்கப்பட வேண்டும்.

5அசல் சொத்து ஆவணங்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால், அல்லது கடன் தீர்வு செய்யப்பட்ட 30 நாட்களுக்கு பிறகும் சம்பந்தப்பட்ட பதிவேட்டில் கட்டண திருப்தி படிவத்தை தாக்கல் செய்ய தவறினால், அதற்கான காரணங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், கடன் பெற்றவருக்கு தெரிவிக்க வேண்டும்.
6ஆவணங்களை திருப்பி வழங்குவதற்கு, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் காரணமாக இருந்தால், ஒவ்வொரு நாள் தாமதத்திற்கும், கடன் பெற்றவர்களுக்கு 5,000 ரூபாய் என்ற விகிதத்தில், இழப்பீடு வழங்க வேண்டும்.
7அசல் சொத்து ஆவணங்களுக்கு இழப்பு அல்லது சேதம் ஏற்பட்டால், கடன் பெற்றவர்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சொத்து ஆவணங்களின் நகல் அல்லது சான்றளிக்கப்பட்ட நகல்களை பெற்றுத் தருவதற்கு உதவுவதோடு, இழப்பீடு செலுத்துவதுடன், அதற்குரிய செலவுகளையும் ஏற்க வேண்டும்.
8இதுபோன்ற சந்தர்ப்பங்களில், இந்த நடைமுறைகளை முடிக்க நிறுவனங்களுக்கு கூடுதலாக 30 நாட்கள் தேவைப்படும். தாமதத்திற்கான கால அபராதம் அதன் பிறகு கணக்கிடப்படும். அதாவது மொத்தம் 60 நாட்களாக கணக்கிடப்படும்.
இவ்வாறு ரிசர்வ் வங்கி சுற்றறிக்கையில் தெரிவித்து உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.