"18 வருடப் போராட்டம்; அப்பாவுடனான சண்டை; இயக்குநர் கனவு" – கண்கலங்கிய மனோஜ் பாரதிராஜா

இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பில் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் ஷ்யாம், ரக்ஷனா, பாரதிராஜா ஆகியோர் நடிப்பில்  வெளியாகவுள்ள திரைப்படம் மார்கழி திங்கள்.

மார்கழி திங்கள் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

இத்திரைபடத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று இரவு சென்னையில் நடைபெற்றது.  கார்த்தி, சிவகுமார், பாரதிராஜா, ஆர்.கே. செல்வமணி, சீமான், லிங்குசாமி என ஏராளமான திரை பிரபலங்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்திருந்தனர்.

கார்த்தி

நிகழ்ச்சியில் முதலில் பேசிய கார்த்தி , “இது என் நண்பனின் மேடை . நானும் மனோஜ் பாரதிராஜாவும் ஒரே தெருவில் ஒன்றாக விளையாடி வளர்ந்தவர்கள். பெரியவர்கள் யாரும் எங்களை விளையாட சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். நானும் மனோஜும் ஒரே வயது என்கிற காரணத்தால் உடனே நண்பர்கள் ஆகிட்டோம். சின்ன வயதிலிருந்து அவனுக்கு இயக்குநராவதுதான் ஆசை. ஆனால் பாரதிராஜா அங்கிள்தான் அவனை நடிக்கும்படி சொல்லிவிட்டார்.

தற்போது அவன் ஆசைப்பட்ட கனவு நிறைவேறி இருக்கிறது. முதல் படமே புது முகங்களை வைத்து மனோஜ் இயக்கி இருப்பது வரவேற்கத்தக்கது . அதுவும் பாரதிராஜா அங்கிளை வைத்து வேலை வாங்கினது அதைவிட சிறப்பு” என்று பேசி சிரித்தார்.  அதன் பிறகு மார்கழி திங்கள் படத்தின் அறிமுக நடிகர்களான ஷ்யாம், நஷா, ரக்க்ஷனா ஆகியோர் தங்கள் அனுபவங்களைப்  பகிர்ந்து அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

மனோஜ் பாரதிராஜா

அடுத்தபடியாக படத்தின்  இயக்குநர் மனோஜ் பாரதிராஜா பேசுகையில், “இயக்குநர் ஆகவேண்டும் என்கிற என் 18 வருட போராட்டம் இன்று நிறைவேறி இருக்கிறது. ஆரம்ப காலகட்டத்தில் நான் இயக்குநர் ஆக ஆசைப்படும் போது என்னை நடிக்கும்படி அப்பா வற்புறுத்தினார். அப்போது எனக்கும் அப்பாவுக்கும் 5-6 மாதங்கள் சண்டையாக இருந்தது.

அதன் பிறகு என் நடிப்பில் தாஜ்மஹால் திரைப்படம் வெளியாகி சில ஆண்டுகள் ஆன பிறகும் ஒரு பேர் வாங்கின நடிகனாக நான் உருவாகவில்லை. தொடர்ந்து போராடி இப்போதுதான்  நான் ஆசைப்பட்டபடி  இயக்குநர் ஆகிருக்கேன். இந்த படத்தில் முதல் நாள் ஷூட்டிங்கின்போது என் அப்பாவுக்கு சீன் சொல்லிக் கொடுத்தேன்.

மனோஜ் பாரதிராஜா

‘என்னடா என்னை பழி வாங்குகிறாயா’ என்று கேட்டார். படத்தில் அருமையாக  நடித்திருக்கிறார். புதுமுக நடிகர்கள் எல்லாருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். என் மனைவி , அம்மா எல்லாருக்கும் என் மேல் பெரும் நம்பிக்கை இருந்தது. என்னை சுற்றி இருக்கும் பாசிட்டிவிட்டி அவர்கள் தான் என்று சொல்லி கண்கலங்கினார்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.