உத்தரப்பிரதேச மாநிலம், முசாபர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது பெண்ணுக்குக் கடந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடந்தது. இந்த நிலையில், ஆகஸ்ட் 5-ம் தேதி அந்தப் பெண்ணின் கணவர், அவரின் தாயாரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது, வீட்டில் மாமனாரும், அந்தப் பெண்ணும் இருந்திருக்கிறார்கள். அந்தச் சமயம் மாமனார் அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/1694712547_41_images__5_.jpg)
மேலும், நடந்ததை வெளியே கூறக் கூடாது என்றும் மிரட்டிருக்கிறார். ஆனால், பாதிக்கப்பட்ட பெண், தன் கணவனிடம் இந்த விவகாரத்தைத் தெரிவித்திருக்கிறார். அதையறிந்து அதிர்ச்சியடைந்த கணவர், பாதிக்கப்பட்ட தன் மனைவியிடம், “என் அப்பா உன்னைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதனால், இனி நீ என் மனைவியாக இருக்க முடியாது. எனக்கு அம்மாவாகிவிட்டாய். இப்போதே வீட்டைவிட்டு வெளியேறு. இனி நீ என்னுடன் வாழ முடியாது” எனத் தெரிவித்திருக்கிறார்.
இதைச் சற்றும் எதிர்பார்க்காத பாதிக்கப்பட்ட பெண், கடந்த 7-ம் தேதி காவல் நிலையத்தில் இது தொடர்பாகப் புகார் அளித்திருக்கிறார். அதையடுத்து, காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், அவரின் தந்தை ஆகியோர்மீது பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை), பிரிவு 323 (தாமாக முன்வந்து காயப்படுத்தியதற்காக தண்டனை), பிரிவு 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்) ஆகியவற்றின்கீழ் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர். ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமியார், “என் மருமகள் சொல்லும் எந்தக் குற்றமும் நடக்கவில்லை. பண ஆதாயம் பெறுவதற்காக இப்படிப் பொய்ப் புகார் அளித்திருக்கிறார்” எனக் குற்றச்சாட்டை மறுத்திருக்கிறார். இது குறித்து காவல்துறை விசாரணை நடத்திவருகிறது.