கொழும்பு: நடப்பு ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில்,இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கையின் வெற்றி பாகிஸ்தான் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் சூப்பர்4 சுற்றின் முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தான் தோற்றுப்போய் போட்டித்தொடரில் இருந்து வெளியேறிவிட்டது.
மழையால் போட்டி பாதிக்கப்படும் என்ற அச்சம் நிலவிய நிலையில், மழையின் காரணமாக போட்டி துவங்குவது தாமதமானது. இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக தாமதமான நிலையில், போட்டியின் ஓவர்கள் 45ஆக குறைக்கப்பட்டது. ஆனால், மீண்டும் மழை பெய்ததால் 42 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டது.
பாகிஸ்தான் அணிக்கு மழை மட்டுமல்ல, வேறு சில இடைஞ்சல்களும் இருந்தது. இமாம் உல்-ஹக்குக்கு முதுகுவலியால் ஓய்வு கொடுக்கப்பட்டு, அவருக்கு பதிலாக பஹர் ஜமான் சேர்க்கப்பட்டார். ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா மற்றும் பஹீம் அஷ்ரப் ஆகியோர் காயமடைந்ததால், அவர்களுக்கு பதிலாக முகமது வாசிம், ஜமன் கான், முகமது வாசிம் ஆகியோர் அணியில் இடம் பிடித்தனர்.தற்போது, நடப்பு சாம்பியன் இலங்கையும், ஏற்கனவே அரையிறுதியில் தகுதி பெற்ற இந்தியாவும் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் மோதும்.
அரையிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில், பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து, 252 ரன்கள் எடுத்தது.
ஆனால், கடைசிப் பந்தில் இரண்டு ரன் தேவைப்பட்ட நிலையில், அசலங்கா இரண்டு ரன்கள் எடுத்து, இலங்கை அணியை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தார்.
அணியின் தோல்வியால் கோபமடைந்த கேப்டன் பாபர்!
ஆசிய கோப்பையில் இருந்து வெளியேறியது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் அசம் வருத்தத்தைப் பகிர்ந்துக் கொண்டார். ‘இலங்கை நன்றாக விளையாடியது, எங்களை விட சிறப்பாக விளையாடியது, அதனால் தான் வெற்றி பெற்றது. பந்துவீச்சிலும், பீல்டிங்கிலும் சரியில்லாததால் நாங்கள் தோற்றோம். மிடில் ஓவர்களில் நாங்கள் சரியாக பந்துவீசவில்லை. மெண்டிஸ் மற்றும் சமரவிக்ரம ஜோடி நன்றாக விளையாடியது. ஆனால் நாங்கள் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்கவில்லை” என்று பாகிஸ்தான் கேப்டன் தெரிவித்தார்.
இலங்கை அணி, 11-வது முறையாக ஆசியக்கோப்பைத் தொடரில் இறுதிப்போட்டிக்கு இலங்கை முன்னேறியது. இன்னும் இரண்டு நாட்களில், அதாவது ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 17ஆம் தேதி இந்தியாவை சந்திக்கிறது. ஆசியக் கோப்பை துவங்கப்பட்ட 39 ஆண்டுகளில், இந்தியாவும் பாகிஸ்தான் அணியும் இறுதிப் போட்டியில் மோதிக் கொண்டதில்லை என்ற நிலையில், இந்த ஆசியக் கோப்பை அந்த குறையை நிவர்த்தி செய்யுமா என்ற ரசிகர்களின் ஏக்கம் நிறைவேறாமல் போய்விட்டது.