மகளிர் உரிமை தொகை | வங்கிக் கணக்கில் முன்கூட்டியே ரூ.1,000 செலுத்தப்பட்டதால் பெண்கள் மகிழ்ச்சி

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். திட்டத்தில் குழப்பம், குறைபாடு ஏற்படாமல் கண்காணிக்குமாறு முதல்வர் ஏற்கெனவே அறிவுறுத்தியதால், கடந்த சில நாட்களாக வங்கிக் கணக்கு சரிபார்ப்பு பணிகள் நடந்து வந்தன. 1.06 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளை சரிபார்க்க ரூ.1 அனுப்பப்பட்டது.

இந்நிலையில், திட்டம் தொடங்கப்படும் நாளான இன்று அனைத்து வங்கிக் கணக்குக்கும் ஒரே நேரத்தில் தொகையை விடுவித்தால் தொழில்நுட்ப சிக்கல் ஏற்படக்கூடும் என்பதால், அதை தவிர்க்கும் விதமாக, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் குறிப்பிட்ட அளவு பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேற்றே ரூ.1,000 உரிமை தொகை விடுவிக்கப்பட்டது.

பயனாளிகளுக்கு இதுகுறித்த குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டது. வங்கிகளும் அந்த தொகை வைப்பு செய்யப்பட்டதற்கான குறுஞ்செய்திகளை பயனாளிகளுக்கு அனுப்பின. அறிவித்த நாளுக்கு முன்பாகவே ரூ.1,000 வந்து சேர்ந்ததால் பெண்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. அரசு முத்திரை, திட்டத்தின் பெயர், வங்கி பெயர், பயனாளி பெயர் உள்ளிட்ட விவரங்களுடன் பிரத்யேகமாக ஏடிஎம் அட்டையும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அட்டையையும் பயனாளிகளுக்கு முதல்வர் இன்று வழங்குகிறார். தொடர்ந்து, மற்ற மாவட்டங்களிலும் இதை பயனாளிகளுக்கு அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் வழங்குகின்றனர்.

1.63 கோடி பேர் விண்ணப்பம்: சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் பெறுவோர், மாற்றுத் திறனாளி உதவித்தொகை பெறுவோரின் குடும்பத்தை சேர்ந்த பெண்களும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் அறிவித்திருந்தார். இதையடுத்து, ஆக.18 முதல் 20-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. மொத்தம் 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

பிறகு, வருமான வரி, வாகனப் பதிவு, மின் இணைப்பு உட்பட அரசிடம் இருந்த தகவல் தரவுகளுடன், விண்ணப்பதாரர்கள் அளித்த தகவல்கள் ஒப்பிடப்பட்டன. போதிய விவரங்கள் கிடைக்காதது மற்றும் சந்தேகம் உள்ள விண்ணப்பங்கள் தொடர்பாக கள அலுவலர்கள் ஆய்வு நடத்தி, தகவல்களை சரிபார்த்தனர். இதையடுத்து, 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

மாதாமாதம் அவர்களது வங்கிக் கணக்கிலேயே இத்தொகை செலுத்தப்படும் என்பதால், பயனாளிகளின் வங்கிக் கணக்கை சரிபார்க்கும் பணி கடந்த செப்.12-ம் தேதி முதல் நடந்தது. இதற்காக அவர்களது வங்கிக் கணக்குக்கு ரூ.1 அனுப்பப்பட்டது. அவர்களை அதிகாரிகள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, வங்கிக் கணக்குக்கு பணம் வந்தடைந்த தகவலை உறுதி செய்தனர்.

இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி, அண்ணா பிறந்தநாளான இன்று இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் விழாவில், 10 ஆயிரம் மகளிருக்கு உரிமைத் தொகையை வழங்கி, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த விழாவுக்காக கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.