“காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் கேட்பது யாசகம் அல்ல… நம் உரிமை!” – அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்

வேலூர்: “காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் கேட்பது யாசகம் இல்லை. அது நம்முடைய உரிமை. உச்ச நீதிமன்றத்தால் அறுதியிட்டு சொல்லப்பட்ட உரிமை. ‘கர்நாடகத்தில் மழை பெய்து ஏராளமாக தண்ணீர் வந்தால் மட்டும்தான் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க முடியும், குறைவாக தண்ணீர் இருந்தால், தண்ணீர் கொடுக்க முடியாது’ என்று கர்நாடகா சொல்ல முடியாது” என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “காவிரியில் நாம் தண்ணீர் கேட்பது யாசகம் இல்லை. அது நம்முடைய உரிமை. உச்ச நீதிமன்றத்தால் அறுதியிட்டு சொல்லப்பட்ட உரிமை. கர்நாடகம் தங்களிடத்தில் தற்போது தண்ணீர் இல்லை என்கிறார்கள். அதற்காக மழை பெய்து ஏராளமாக தண்ணீர் வந்தால் மட்டும்தான், தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க முடியும், குறைவாக தண்ணீர் இருந்தால், தண்ணீர் கொடுக்க முடியாது என்று சொல்ல முடியாது.

கையளவு தண்ணீர் இருந்தாலும், அதை எங்களுக்கு பங்கிட்டுத் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால், கர்நாடகம் ஆங்காங்கே அணைகளிலே தண்ணீரை நிறுத்தி வைத்துக் கொண்டு கே.ஆர்.எஸ், கபினி அணையிலும் அதேபோல மற்ற அணைகளிலும் நிறுத்தி வைத்துள்ளனர். எனவே, கர்நாடகவில் இருக்கும் தண்ணீரில், எங்களுக்கு உரிய தண்ணீரை தர வேண்டும் என்று தமிழகம் கர்நாடகாவிடம் கேட்கவில்லை. தமிழகம் கேட்டது, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவிடம் கேட்டோம். அவர்கள் உடனடியாக கண்ணை மூடிக்கொண்டு 15 நாட்களுக்கு 5000 கன அடி தண்ணீ்ர திறந்துவிடுங்கள் என்று கூற மாட்டார்கள்.

காரணம், அவர்கள் இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவானவர்கள். கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீரின் இருப்பைக் கணக்கிட்டு, 15 நாட்களுக்கு விநாடிக்கு 5000 கனஅடி தண்ணீரை தரலாம் என்று முடிவு செய்து அறிவித்துள்ளார்கள். அதையும் விடமாட்டோம் என்று கர்நாடக அரசு கூறுகிறது. இது உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஒரு சட்ட ஆணையத்தை மீறுவதாகும். இந்தப் போக்கு சரியானது அல்ல.

அதற்காக அவர்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுகின்றனர். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதால், ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை. நாமும் கூட்டலாம், அதில் ஒன்றும் தவறு இல்லை. ஆனால், 21-ம் தேதி இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. காவிரி விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி உள்ளிட்டோர் தெரிவிப்பார்கள். அந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் ஆணைக்கு கட்டுப்பட வேண்டும்.

காவிரி வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் நமக்கு சாதகமாக இல்லை என்றால், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அடுத்த என்ன செய்வது என்பது குறித்து யோசிக்கலாம். எனவே, இந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக அரசு எதிர்பார்க்கிறது” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.