'காவிரி பிரச்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்' – வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்திற்கு தண்ணீர் வழங்காமல் கர்நாடக அரசு முரண்டு பிடித்து வருகிறது. இதையடுத்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆக. 14-ம் தேதி மனு தாக்கல் செய்தது. அதில், “கர்நாடகாவில் கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி, கபினி ஆகிய நான்கு முக்கிய அணைகள் இருக்கிறது. ஆகஸ்ட் 8-ம் தேதி நிலவரப்படி மொத்த இருப்புக் கொள்ளளவான 114.671 டிஎம்சி-யில் 93.535 டிஎம்சி (82%) நீர் இருப்பு இருக்கிறது. எனவே, பிலிகுண்டுலுவிலிருந்து விநாடிக்கு 24 ஆயிரம் கனஅடி நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும்” என வாதிடப்பட்டது.

காவிரி நீர்

இதற்கு மறுப்பு தெரிவித்த கர்நாடக, “தென்மேற்குப் பருவமழை போதுமான அளவுக்குப் பெய்யவில்லை. இதனால் கர்நாடக அணைகளில் தண்ணீர் இருப்பு குறைவாக இருக்கிறது. மேலும், எங்களுக்குக் குடிநீர்த் தேவை இருக்கிறது. எனவே, தமிழகத்துக்கு விநாடிக்கு 3,000 கனஅடி தண்ணீர் மட்டுமே வழங்க முடியும்” என வாதிடப்பட்டது. பின்னர் ஒழுங்காற்றுக்குழு கர்நாடகாவில் இருக்கும் சம்பந்தப்பட்ட அணைகளில் ஆய்வு மேற்கொண்டது. அதில், ‘கடந்த 30 ஆண்டுகளின் சராசரி நீர்வரத்தின்படி, ஆகஸ்ட் 9-ம் தேதி 42.54%, ஆகஸ்ட் 27-ம் தேதி 51.22% நீர்வரத்துப் பற்றாக்குறை இருக்கிறது’ எனக் கணக்கிட்டது

இதையடுத்து, “விநாடிக்கு 14,200 கனஅடி தண்ணீர் வழங்க வேண்டும்” என தமிழக அரசு தெரிவித்தது. இதுவும் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 29-ம் தேதி காவிரி மேலாண்மைக் கூட்டம் நடைபெற்றது. அதில், “தமிழகத்துக்கு வினாடிக்கு 5,000 கன அடி நீரை 15 நாட்களுக்குத் திறந்துவிட வேண்டும்” என உத்தரவிடப்பட்டது. ஆனால் அதையும் முறையாக அவர்கள் வழங்கவில்லை. இதனால் தமிழகத்தில் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா

இதற்கிடையில் கர்நாடக அரசு சார்பில் அனைத்துக் கட்சி சிறப்பு அவசர கூட்டம் கடந்த 13-ம் தேதி நடைபெற்றது. அந்த மாநில முதல்வர் சித்தராமையா தலைமை வகித்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கர்நாடக அணைகளில் போதிய அளவுக்கு நீர் இல்லை. இதுவரை இருப்பில் இருந்த நீரை தமிழகத்துக்கு திறந்துவிட்டுள்ளோம். எஞ்சியுள்ள நீரைக் கொண்டே கர்நாடக‌ விவசாயிகளின் பாசன தேவை, பெங்களூரு உள்ளிட்ட மாநகரங்களின் குடிநீர் தேவை ஆகியவற்றை பூர்த்தி செய்ய வேண்டும். கர்நாடக அரசை பொறுத்தவரை இதற்கு தான் முதல் முன்னுரிமை.

தற்போதைய நீர் இருப்பு குடிநீர் பயன்பாட்டுக்கு போதுமானதாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குடிநீருக்கு சேமித்து வைக்காமல் தமிழகத்தின் பாசனத்துக்கு நீரைதிறந்துவிட முடியாது. இதை காவிரி மேலாண்மை ஆணையத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் தெரிவிப்போம். தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும் நிலையில் கர்நாடகம் இல்லை. எனவே தண்ணீர் திறந்து விட முடியாது என காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிட இந்த கூட்டத்தின் மூலம் முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

துரைமுருகன்

தண்ணீர் தரக்கூடாது என அவர்கள் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியிருக்கிறார்கள். ஆனால் தண்ணீரை பெறுவதற்கு தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டுவதற்கு தமிழக அரசு தயங்கி வருகிறது என பலரும் குற்றம்சாட்டி வருகிறார்கள். இதற்கிடையில் கடந்த 13-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “காவிரி ஒழுங்காற்றுக் குழு 15 நாள்களுக்கு 5000 கனஅடி தண்ணீரை கர்நாடக திறந்து விட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இதுகுறித்து அவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. எனவே, கர்நாடக அரசு என்ன முடிவெடுக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும்.

அவர்கள் தமிழக அரசுக்கு என்ன பதில் சொல்கிறார்கள் என்பதை விட, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழுவுக்கு என்ன பதில் சொல்கின்றனர் என்பதை பார்க்க வேண்டும். அதன் பின்னர், எங்களுக்கு இருக்கும் கடைசி முடிவு, உச்ச நீதிமன்றத்தை நாடுவதுதான். வரும் 21ம் தேதி காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதற்கு முன்பாக, கர்நாடக அரசின் முடிவு தெளிவாக தெரிந்துவிடும். அந்த முடிவையும் வழக்கில் இணைத்து தமிழக அரசு சார்பில் வாதிடப்படும்.

தமிழ்நாடு அரசு

அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவது ஒரு பெரிய விஷயம் அல்ல. அதற்காக கூட்டக் கூடாது என்பதல்ல. வரும் 21-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் என்ன முடிவு வருகிறது என்பதை பார்த்துவிட்டு, வேண்டும் என்றால், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டலாம். எனவே, அந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதற்கு முன்பாகவே அந்தக் கூட்டத்தைக் கூட்ட வேண்டிய தேவை இல்லை. உச்ச நீதிமன்றமே ஒரு குழுவை நியமித்து, கர்நாடக அணைகளில் போதுமான தண்ணீர் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்வதற்கு ஆணையிடலாம்” என்றார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அதிமுக செய்தித்தொடர்பாளர் பாபு முருகவேல், “காவிரி விவகாரத்தில் அம்மா தான் முதலில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றார். அதன் பிறகும் கர்நாடக அரசு தண்ணீர் திறக்கவில்லை. எனவே முதல்வராக இருந்த எடப்பாடி அப்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து காவிரி ஒழுங்காற்று ஆணையம் அமைக்கப்பட்டது. அதுவும் அ.தி.மு.க அரசின் வெற்றி. 10 ஆண்டுகள் நாங்கள் ஆட்சியில் இருந்த போது இதற்காக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரை கூட்டியிருக்கிறோம். ஆனால் காங்கிரஸுடன் கூட்டணியில் தான் தி.மு.க இருக்கிறது. அவர்களிடம் முறையான உரிமையை பெற முடியாமல் இருக்கிறார்கள்.

பாபு முருகவேல்

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இடம் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு வந்துவிட்டீர்கள். எனவே தமிழகத்தில் இவ்வளவு இடம் வேண்டும் என்றால் தண்ணீரை திறந்து விடுங்கள் என்று கேட்க வேண்டியது தானே?. அப்படி செய்தால் தான் கூட்டணி, சீட்டு என்ற முடிவுக்கு உங்களால் ஏன் வர முடியவில்லை. தமிழகத்தில் ஜீவாதார பிரச்னையை வீட தேர்தல் தான் உங்களுக்கு முக்கியமாக இருக்கிறது. ஆட்சி அதிகாரம் தான் பிரதானமாக இருக்கிறது. மக்கள் நலன் என்று வாயில் தான் கூறுகிறீர்கள். பிரதமரை தான் உங்களுக்கு பிடிக்கவில்லை. பிறகு எதற்கு அவருக்கு கடிதம் எழுதுகிறீர்கள். சோனியா, ராகுலிடம் சொல்ல வேண்டியது தானே” என கடுப்பானார்.

மேலும் பாமக உள்ளிட்ட கட்சிகளும், காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.