சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்வில் பேசிய உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை டெங்கு, மலேரியாவுடன் ஒப்பிட்டார். அதோடு, சனாதனம் சமத்துவத்திற்கு எதிரானது என்றும், அதனை ஒழிக்க வேண்டும் என்று அதிரடியாக பேசினார். உதயநிதியின் சனாதன எதிர்ப்பு பேச்சுக்கு நாடு முழுவதும் ஆதரவும், எதிர்ப்பும் ஒரு பக்கம் எழ, பாஜக-வோ இவ்விவகாரத்தை தனக்கு சாதகமாக மாற்றி எதிர்கட்சிகள் ஒன்றிணைத்திருக்கும் I.N.D.I.A கூட்டணிக்குள், தேன்கூட்டில் கல் எரிவது போல் காய்களை நகர்த்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, நேற்று (செப் 14), மத்திய பிரதேசத்தில் பல்வேறு வளர்ச்சி பணி திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, “சுவாமி விவேகானந்தர் மற்றும் லோகமான்ய திலகர் ஆகியோருக்கு உத்வேகம் அளித்த ‘சனாதன தர்மத்தை’ I.N.D.I.A கூட்டணி அழிக்க நினைக்கிறது.
இன்று வெளிப்படையாகவே சனாதனத்தை குறிவைக்க ஆரம்பித்து விட்டார்கள். நாளை நம் மீதான தாக்குதல்களை அதிகப்படுத்துவார்கள். நாடு முழுவதும் உள்ள அனைத்து ‘சனாதனிகளும், நம் நாட்டை நேசிக்கும் மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்படிப்பட்டவர்களை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று பேசியுள்ளார். இதுவரை தனது அமைச்சரவையில் உள்ள சகாக்கள், நாடு முழுவதுமுள்ள பாஜக தலைவர்களை எதிர்வினை ஆற்ற அறிவுரை வழங்கிய மோடி, இன்று தானும் அதில் இணைந்திருக்கிறார்.
நிலைமை இவ்வாறு இருக்க, சனாதன சர்ச்சை குறித்து ஏ.என்.ஐ. செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல், “தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்தை முன்வைத்து, I.N.D.I.A கூட்டணிக்குள் பிளவை ஏற்படுத்த பா.ஜ.க தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி என்ன செய்கிறார் என பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குத் தெரியுமா… அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் மதமோதலை உருவாக்குவதுதான் பா.ஜ.க-வின் திட்டம். இதற்காகத்தான் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். பா.ஜ.க-வின் அரசியல் திட்டத்தை ஆளுநர் ரவி செயல்படுத்துகிறார்.
ஓர் ஆளுநர் எப்படி அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட முடியும்… தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆட்சியில் இருக்கிறார்கள். அங்கே மத அடிப்படையில் குழப்பத்தை உருவாக்கத்தானே ஆளுநர் ரவியை அனுப்பிவைத்தீர்கள். நீங்கள்தான் குற்றவாளிகள்.
தமிழ்நாட்டில் இருப்பவர்களை உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு அழைத்துச் சென்று விஷ வித்துகளை விதைத்து அனுப்பியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மதவாத அரசியல், மதமோதல் அரசியல் ஆகியவை இல்லை. தமிழ்நாட்டில் அமைதியை சீர்குலைக்க பா.ஜ.க முயல்கிறது. இதற்காக தமிழ்நாட்டு மக்களிடம் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மன்னிப்பு கேட்க வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
சமீப காலமாகவே, எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் முதலமைச்சர்களுக்கும் ஆளுநருக்கும் இடையே அதிகார போட்டி நிலவி வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில், தமிழ்நாடு அரசு தயாரித்த, ஆளுநர் உரையை மாற்றி வாசித்தது முதல் செந்தில் பாலாஜி விவகாரம் வரை ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் ஏழாம் பொருத்தம்தான். அதேபோல, கேரளாவில் பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியப்பதில் ஆளுநருக்கும் இடது ஜனநாயக முன்னணி அரசுக்கும் பிரச்னை நீடித்து வருகிறது. தெலங்கானாவில் கே.சி.ஆர் அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளிப்பதில்லை என தொடர் குற்றச்சாட்டு உள்ளது.
தமிழக அரசியலை உற்றுநோக்கும் அரசியல் பார்வையாளர்கள், “மற்ற மாநிலங்களில் எப்படி இருந்தாலும், தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி கொள்கை ரீதியாகவும் திமுக அரசுக்கு நெருக்கடி கொடுத்து பாஜக, ஆர்.எஸ்.எஸ் செயல்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார் என்கிற குற்றச்சாட்டை திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் சனாதன தர்மம் குறித்தும், அதன் பெருமைகள் பற்றியும் தொடர்ந்து பேசி வருகிறார். அப்படி இருக்க, இப்போது அதற்கு திமுக-வும் பதிலடி கொடுக்க தொடங்கியுள்ள நிலையில்தான் தமிழ்நாட்டின் அரசியல் தட்ப வெப்பம் அறிந்து கபில் சிபல் தன் கருத்தை முன் வைத்திருக்கிறார்.
எனவே இந்த விவவகாரத்தை இரு தரப்பும் கவனமாக கையாளவில்லை என்றால், கபில் சிபல் எச்சரித்திருப்பது போல் தமிழ்நாட்டில் மத கலவரம் உருவாக வாய்ப்பு இருக்கிறது.” என்கிறார்கள்
கபல் சிபல், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து விமர்சித்திருக்கும் அதேநேரத்தில் டெல்லியில் உள்ள குடியரசு துணைத் தலைவர் மாளிகையில், குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கரை ஆளுநர் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ விவகாரம் பேசு பொருளிலேயே இருக்கும் நிலையில் இந்த சந்திப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.!