சனாதனம் என்பது ஹிந்துக்களின் நித்திய கடமைகளின் தொகுப்பு: ஐகோர்ட் நீதிபதி கருத்து| Sanatanam is a set of eternal obligations of Hindus: opinion of iCourt judge

சென்னை: ‛‛ சனாதன தர்மம் என்பது ஹிந்துக்களின் நித்திய கடமை, நாட்டிற்கான கடமை, பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமை உள்ளிட்ட கடமைகளின் தொகுப்பு” என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சேஷசாயி கூறியுள்ளார்.

திருவாரூர் அரசு கலைக் கல்லூரியில் சனாதன தர்மத்துக்கு எதிரான கருத்துக்களை பகிரும்படி சுற்றறிக்கை வெளியிடப்பட்டதை எதிர்த்து ஹிந்து முன்னணி அமைப்பு செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என். சேஷசாயி முன் விசாரணைக்கு வந்த போது, கல்லூரி வெளியிட்ட சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்டு வழக்கை முடித்து வைத்த நீதிபதி சேஷசாயி கூறியதாவது: ‛‛ சனாதன தர்மம் என்பது ஹிந்துக்களின் நித்திய கடமை, நாட்டிற்கான கடமை, பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமை உள்ளிட்ட கடமைகளின் தொகுப்பு.

இந்த கடமைகள் அழிக்கத்தக்கவையா? குடிமகன் நாட்டை நேசிக்கக்கூடாதா ? நாட்டிற்கு சேவையாற்றுவது கடமை இல்லையா? பெற்றோரை பராமரிக்க வேண்டியது கடமை இல்லையா? காலமாற்றத்துக்கு பொருந்தாத கடமைகள் இருந்தால் கட்டாயம், நீக்க வேண்டும்.

சனாதனம் சாதியவாதத்தையும், தீண்டாமையையும் ஊக்குவிப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. நாட்டில் தீண்டாமையை சகித்துக் கொள்ள முடியாது. அனைத்து குடிமக்களும் சமமானவர்கள். மத பழக்க வழக்கங்களில் சில மோசமான நடைமுறைகள் தெரியாமல் புழக்கத்தில் இருக்கலாம்.

அவற்றை களையெடுக்க வேண்டுமே தவிர, பயிரை ஏன் வேரறுக்க வேண்டும். தீண்டாமைக் கொடுமையை ஒழிக்கும் வகையில் மாணவ மாணவியரை கல்லூரி ஊக்குவிக்கலாம். ஒவ்வொரு மதமும், நம்பிக்கைகளின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டவை. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மற்றொருவரை காயப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.