புதுடெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறும் என்று அந்தக் குழுவின் தலைவரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றை ஒன்றாக நடத்துவது குறித்து ஆய்வு செய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு கடந்த 2-ம் தேதி ஒரு குழுவை அமைத்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத், 15-வது நிதி ஆணையத்தின் முன்னாள் தலைவர் என்.கே. சிங், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, முன்னாள் ஊழல் கண்காணிப்பு ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பங்கேற்பார் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் விமர்சனமும் எதிர்ப்பும் ஏற்பட்டது. முன்னாள் குடியரசுத் தலைவர் தலைமையில் குழு அமைத்தது மரபு மீறிய தவறான செயல் என காங்கிரஸ் விமர்சித்தது. “முன்னாள் குடியரசு தலைவர் ஒருவரை ஒரு கமிட்டியின் தலைவராக அரசு நியமிப்பதை இப்போதுதான் நான் முதன்முறையாகப் பார்க்கிறேன். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்வதற்கான குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி அல்லது ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை நியமித்திருக்கலாம்.
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை குடியரசுத் தலைவரைக் கொண்டு திறக்காமல், பிரதமரைக் கொண்டு திறந்ததன் மூலம், குடியரசுத் தலைவர் பதவிக்கு இருக்கும் கண்ணியத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர். தற்போது முன்னாள் குடியரசுத் தலைவர் ஒருவரை ஒரு குழுவின் தலைவராக நியமித்து மரபை மீறியுள்ளனர். இதன் மூலம் தவறான பாரம்பரியத்தை உருவாக்கி இருக்கிறார்கள்” என காங்கிரஸ் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிரமோத் திவாரி விமர்சித்திருந்தார். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த ஆய்வுக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.