ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து மும்பைக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மும்பையில் தங்கி இருக்கும் ஆப்பிரிக்க பிரஜைகள் மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள நகரங்களில் நடக்கும் பார்ட்டிகளுக்கு தேவையான கொக்கைன் மற்றும் எம்.டி.எனப்படும் போதைப்பொருளை சப்ளை செய்கின்றனர். நைஜீரியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து மாணவர் விசா, சுற்றுலா விசா, பிஸ்னஸ் விசாக்களில் மும்பை வந்த பிறகு விசா முடிந்த பிறகும் தொடர்ந்து இந்தியாவில் தங்கிக்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இது போன்று போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் ஆப்பிரிக்க பிரஜைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க போதைப்பொருள் தடுப்பு பிரிவு இணை கமிஷனர் லட்சுமி கவுதம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இப்படையில் கடந்த சில மாதங்களில் மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ரெய்டு நடத்தி நைஜீரியா, தான்சானியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த 15 போதைப்பொருள் சப்ளையர்களை கைது செய்துள்ளனர்.
இது குறித்து குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி பிரகாஷ் ஜாதவ் கூறுகையில், ”ஆப்பிரிக்க பிரஜைகள் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து போதைப்பொருளை வரவழைத்து மும்பை மெட்ரோபாலிடன் பகுதியில் சப்ளை செய்து வருகின்றனர். ஆப்பிரிக்க பிரஜைகள் பிடிபட்டுவிட்டால் போதைப்பொருளை தங்களுக்கு சப்ளை செய்தது யார் என்ற விபரத்தை வெளியில் சொல்வதில்லை. அதோடு கைது செய்யப்படும் நபரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் மும்பைக்கு வந்து கைது செய்யப்படும் போதைப்பொருள் நபர் செய்து வந்த போதைப்பொருள் சப்ளையை கவனித்துக்கொள்வதோடு சட்ட போராட்டங்களையும் கவனித்துக்கொள்கிறார்.
இதற்காக அவர்களுக்கு கணிசமான ஒரு தொகை கொடுக்கப்படுகிறது. போதைப்பொருளை எடுத்துச் செல்பவர்கள் இந்திய சட்டங்களை தெரிந்து கொண்டு மிகவும் குறைந்த அளவு மட்டுமே எடுத்துச்செல்கின்றனர். இதனால் திடீரென பிடித்தாலும் எளிதில் ஜாமீனில் வெளியில் வந்துவிட முடிகிறது”என்று தெரிவித்தார்.
கடந்த ஜூன் மாதம் மும்பை நாலாசோபாரா ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்ட நைஜீரியாவை சேர்ந்த பிரைட் ஆலிவ் என்பவரிடமிருந்து 1.1 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் எப்போது இந்தியாவிற்கு வந்தார் என்று தெரியவில்லை.
ஆனால் அவரிடம் காலாவதியான விசா மட்டுமே இருந்தது. இதே போன்று தான்சானியா நாட்டை சேர்ந்த புருனோ அகமத் அலி மற்றும் அப்துல்லா ஆகிய இரண்டு பேரும் மஜித் பந்தர் பகுதியில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போன்று மும்பை முழுவதும் மொத்தம் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரும்பாலான ஆப்பிரிக்க போதைப்பொருள் சப்ளையர்கள் மும்பையின் புறநகர் பகுதியான நாலாசோபாரா, நவிமும்பை, பால்கர் பகுதிக்கு சென்றுவிட்டனர். ஆனால் தங்களது தொழிலுக்கு மைய பகுதியாக மஜித் பந்தர் பகுதியை பயன்படுத்தி வருகின்றனர். மஜித் பந்தர் பகுதியில் தான் போதைப்பொருள் சரளமாக கிடைக்கிறது என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.