உலகக்கோப்பைக்கு முன்பாக இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவிருக்கிறது. இந்தத் தொடரில் யாரும் எதிர்பாராதவிதமாக வாஷிங்டன் சுந்தர், ரவிச்சந்திரன் அஷ்வின் என இரண்டு தமிழக வீரர்கள் இடம்பெற்றிருக்கின்றனர்.
ஆசியக்கோப்பைத் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்திருந்தது. இதில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி சாம்பியனாகியிருந்தது. ஆசியக்கோப்பைக்கான அணியின் அஷ்வின், வாஷிங்டன் சுந்தர் இருவரும் இடம்பெற்றிருக்கவில்லை. ஆசியக்கோப்பை நடந்து கொண்டிருக்கும் போதே அறிவிக்கப்பட்ட உலகக்கோப்பைக்கான அணியிலும் இருவரின் பெயரும் இடம்பெற்றிருக்கவில்லை. இந்த சமயத்தில்தான் ஆசியக்கோப்பையின் இறுதிப்போட்டிக்கு முன்பாக அக்சர் படேல் காயம் காரணமாக அணியிலிருந்து விலகினார். அவருக்கான உடனடி மாற்றாக வாஷிங்டன் சுந்தர் வரவழைக்கப்பட்டார். இறுதிப்போட்டிக்கான ப்ளேயிங் லெவனிலும் இடம்பெற்றிருந்தார்.
இந்நிலையில்தான் உலகக்கோப்பைக்கு முன்பாக இந்திய அணி ஆடவிருக்கும் கடைசி தொடரான ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் ரவிச்சந்திரன் அஷ்வின், வாஷிங்டன் சுந்தர் என இரண்டு தமிழக வீரர்களின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது.
‘அக்சர் படேல் விஷயத்தில் இப்போது எதையும் சொல்ல முடியாது. அவர் காயமடைந்திருக்கிறார். விரைவில் குணமடைந்து விடுவார் என நம்புகிறோம். உலகக்கோப்பைக்கு முன்பாக அக்சர் குணமடையவில்லையெனில், அணிக்கு சில ஆப்சன்கள் தேவை. அதற்காகவே வாஷிங்டன் சுந்தரையும் அஷ்வினையும் அணியில் சேர்த்திருக்கிறோம். அவர்களும் போட்டிகளில் ஆடி பயிற்சி எடுத்து தயாராகிக்கொள்ள இது நல்வாய்ப்பாக இருக்கும்.’
என தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார்.அக்சர் படேல் குணமாவதில் சிக்கல் எழும்பட்சத்தில் அவருக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் அல்லது ரவிச்சந்திரன் அஷ்வின் இருவரில் யாரோ ஒருவர் உலகக்கோப்பை அணியில் எடுக்கப்பட அதிக வாய்ப்பிருக்கிறது. செப்டம்பர் 28 ஆம் தேதி வரை அணிகள் தங்களின் உலகக்கோப்பைக்கான அணியில் மாற்றங்களை செய்து கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அஷ்வின் கடைசியாக கடந்த ஆண்டு ஜனவரியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இரண்டு போட்டிகளில் ஆடியிருந்தார். அதன்பிறகு ஏறக்குறைய 600 நாட்களுக்குப் பிறகு இப்போதுதான் மீண்டும் ஓடிஐக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருக்கிறார்.
உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அஷ்வின் இருப்பதால் ஏற்படும் மாற்றம் என்ன என்பது பற்றிய உங்களுடைய கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்.