புதுடெல்லி: கொழும்பு ஆர். பிரேமதாசா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆசியக்கோப்பை 2023 இறுதிப் போட்டியில் இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 8வது முறையாக பட்டத்தை வென்றது. சிராஜ் வீசிய நான்காவது ஓவர் தான் ஒட்டுமொத்தமாக போட்டிக்கே திருப்புமுனையாக அமைந்தது. அந்த ஓவரின் முதல் பந்தில் நிசங்கா டக்-அவுட்டானார். அடுத்து மூன்றாவது, நான்காவது பந்தில் சதீரா சமரவிக்ரமா, அசலங்கா ஆகியோர் முறையே அடுத்தடுத்து ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஒரு ஓவர் 4 விக்கெட்
அந்த குறிப்பிட்ட ஓவரின் கடைசி பந்தில் தனஞ்செயா டி சில்வா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்மூலம், சிராஜ் ஒரே ஓவரில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒருநாள் தொடரில் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை எடுத்த நான்காவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை முகமது சிராஜ் படைத்தார்.
வேகமான பந்துவீச்சாளர்
இந்த சாதனை மூலம் ஒருநாள் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளில், தனது 29ஆவது போட்டியில் 50ஆவது விக்கெட்டை கைப்பற்றினார். பந்துகளில் அடிப்படையில், அதிவேகமாக 50ஆவது விக்கெட்டை எடுத்த வீரர் என்ற பெருமையையும் இந்திய கிரிக்கெட்டர் முகமது சிராஜ் (1002 பந்துகள்) பெற்றார்.
இப்படி பல சாதனைகளை, ஆசியக்கோப்பை இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன் சிராஜ் செய்தாலும், பிற இந்திய வீரர்களும், ஆசியக் கோப்பை போட்டித்தொடரில் சில சாதனைகளை செய்துள்ளனர். 2023 ஆசியக் கோப்பையில், ஷுப்மான் கில், குல்தீப் யாதவ், ரோஹித் ஷர்மா என பிற சிறந்த சாதனையாளர்களின் சாதனைகளை பார்ப்போம்.
2023 ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் – சுப்மன் கில்
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் 2023 ஆசியக் கோப்பையில் 6 போட்டிகளில் 1 சதம், 2 அரைசதங்கள் உட்பட 302 ரன்கள் குவித்து அதிக ரன் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இலங்கையின் குசல் மெண்டிஸ் 6 ஆட்டங்களில் 270 ரன்களுடன் 2023 ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் 2வது இடத்தைப் பிடித்தார்.
2023 ஆசிய கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய 2வது வீரர் முகமது சிராஜ்
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 2023 ஆசிய கோப்பையில், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் 2வது இடத்தைப் பிடித்தார். சிராஜ் 5 போட்டிகளில் 12.2 என்ற சராசரியில் 10 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இலங்கையின் மதீஷ பத்திரனா 6 ஆட்டங்களில் 11 விக்கெட்டுகளுடன் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
குல்தீப் யாதவ் ஆசிய கோப்பை 2023 தொடர் – சிறந்த வீரர் விருது
இந்திய அணியின் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் 5 போட்டிகளில் 11.44 என்ற சராசரியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி ‘தொடரின் ஆட்ட நாயகன்’ ஆனார்.
ரோஹித் சர்மா – 2023 ஆசிய கோப்பை அதிக சிக்ஸர்கள்
2023 ஆசிய கோப்பையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 6 போட்டிகளில் 11 சிக்ஸர்களை அடித்துள்ளார். இரண்டாவது அதிகபட்சமாக இப்திகார் அகமது 6 சிக்ஸர்களை அடித்தார்.
ஃபகார் ஜமான் – 2023 ஆசிய கோப்பை அதிக கேட்ச்
பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் ஃபகர் ஜமான் 2023 ஆசியக் கோப்பையில் 5 போட்டிகளில் 4 கேட்சுகளைப் பிடித்தார்.
விராட் கோலி + கே.எல்.ராகுல் – சாதனை பார்ட்னர்ஷிப்
விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் ஆசிய கோப்பை 2023 இல் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக கோஹ்லி மற்றும் ராகுல் ஆட்டமிழக்காமல் 233 ரன்கள் குவித்தனர். முல்தானில் நடைபெற்ற போட்டியில் நேபாளத்திற்கு எதிராக 214 ரன்கள் குவித்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மற்றும் இப்திகார் அகமது ஜோடி இந்தப் பட்டியலில் அடுத்த இடத்தை பிடித்துள்ளது.