மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்ற, 1996-ம் ஆண்டு முதல் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன. 2010-ம் ஆண்டு மீண்டும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இந்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றியது, ஆனால் அதை மக்களவையில் தாக்கல் செய்ய முடியவில்லை.
இப்படி இழுபறியாகச் சென்றுகொண்டிருந்த இந்த மசோதாவை மீண்டும் சட்டமாக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, 2018-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி, பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தது. இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி 22-ம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறுகிறது. இதில் பல வருடங்களாக நிலுவையில் இருந்த மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்யும் மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பதாகக் கூறப்படும் நிலையில், இது நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரிலேயே இன்று அல்லது நாளைக்குள் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. மத்திய அமைச்சரவையின் இந்த முடிவை வரவேற்று, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், “பெண்களுக்கு அதிகாரமளிக்கும் போராட்ட வீரராக தன்னை முன்னிறுத்தும் நமது பிரதமர், கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு அவரது பேச்சை செயல்படுத்தி மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதற்கான நேரம் இது. இந்த நேரத்தில் காங்கிரஸ் அவருக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குகிறது” எனக் குறிப்பிட்டு, 2018-ம் ஆண்டு இந்த மசோதாவை வலியுறுத்தி காங்கிரஸ் வெளியிட்ட கடிதத்தையும் பதிவிட்டிருக்கிறார்.