கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே மோயர் சதுக்கம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கடைகளை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளது. பாதுகாப்பு கருதி அப்பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகள், வியாபாரிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் பேரிஜம் ஏரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ளது. இதனால் வனத்துறையினரிடம் அனுமதி பெற்ற பிறகே சுற்றுலா பயணிகள் ஏரிக்கு செல்ல முடியும். பேரிஜம் ஏரிக்குச் செல்லும் வழியில் தொப்பி தூக்கிப் பாறை, மதிகெட்டான் சோலை, வியூ பாய்ண்ட், அமைதி பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களை பார்வையிட சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவர்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பேரிஜம் ஏரிப் பகுதிகளில் யானைகள் குட்டிகளுடன் சுற்றித் திரிகின்றன. அதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்வதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்நிலையில் நேற்று (செப்.18) இரவு மோயர் சதுக்கம் பகுதிக்கு வந்த யானைகள், அப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கடைகளை சேதப்படுத்தியது.
இன்று (செப்.19) காலை வழக்கம் போல் கடைகளுக்கு வந்த வியாபாரிகள் கடை சேதமாகி இருந்ததையும், கடையில் உள்ள பொருட்கள் சிதறிக் கிடப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், வனத்துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். யானைகள் மோயர் சதுக்கம் பகுதியில் முகாமிட்டிருப்பதால், பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் மற்றும் செய்தியாளர்கள் அப்பகுதிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், “வனத்துறையினரின் மெத்தனத்தால் தான் யானைகள் எங்களுடைய கடைகளை சேதப்படுத்தியுள்ளது. முறையாக யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்டியிருந்தால் கடைகள் பாதுகாப்பாக இருந்திருக்கும். சேதத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்” என்று கூறினர்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், “யானைகள் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து, வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்” என்று கூறினர்.