புதுச்சேரி அ.தி.மு.க-வின் மாநிலச் செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தன்னுடைய தகுதி, வயது, அனுபவம் எதையும் புரிந்துகொள்ளாமல், கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க-வின் தலைவர்களைத் தொடந்து விமர்சனம் செய்து வருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தன்னுடைய மலிவு விளம்பரத்துக்காக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரைப் பற்றி அவ்வப்போது விமர்சனம் செய்து வருகிறார் அண்ணாமலை. மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமராக வரக் கூடாது என்ற சதி அவரின் செயல்பாடுகளில் இருக்கிறது. பேரறிஞர் அண்ணா வாழ்ந்த காலத்தில் அண்ணாமலை பிறந்துகூட இருக்கமாட்டார். ஆனால் தமிழ் மக்களின் நலனுக்காகப் போராடி வாழ்ந்த அண்ணா, தந்தை பெரியார் போன்றவர்களைப் பற்றி அவர் பேசுவது அடிமுட்டாள்தனம். ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக செயல்படக்கூடிய தகுதியோ, திராணியோ இல்லை என்பதை அவ்வப்போது அண்ணாமலைக்கு நிரூபித்து வருகிறார்.
அவர்மீது அவர் சார்ந்த கட்சி உரிய நடவடிக்கை எடுக்காததால், தனது மலிவு விளம்பரத்துக்காக அவ்வப்போது இது போன்று பேசி வருகிறார். அண்ணாவால் பகுத்தறிவு ஊட்டப்பட்ட அ.தி.மு.க-வினரின் வாக்குகளால்தான் தமிழகத்தில் பா.ஜ.க-வுக்கு மூன்று நான்கு எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர். அதே தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்ததால் விரக்தியின் விளிம்பில் இருக்கிறார் அன்ணாமலை. அதனால்தான் அ.தி.மு.க-வால் வெற்றிபெற்ற எம்.எல்.ஏ-க்களை மறந்துவிட்டு, தேவையற்ற கருத்துகளைக் கூறி கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார். இதன் மூலம் அண்ணாமலை ஒரு அரைவேக்காட்டுத் தலைவர் என்பதை அவ்வப்போது நிரூபித்து வருகிறார். பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோர் பற்றி விமர்சனம் செய்த அண்ணாமலை அவர்களுக்கு, புதுச்சேரியில் காலெடுத்து வைக்கும்போது சரியான பதிலடி கொடுக்கப்படும். தன்னுடைய உடலில் உள்ள கொழுப்பை அவ்வப்போது வாய்வழியாக வெளியிடுவதை அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் அமையும் கூட்டணி, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றியைப் பெறும். இந்த தேர்தலுக்குப் பிறகு எடப்பாடியார் தேசிய தலைவராக வருவார் என்பதில் ஐயமில்லை. அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால், தென்னிந்தியாவில் பா.ஜ.க என்ற ஒரு கட்சி இடம் தெரியாமல் போயிருக்கும் என்பதை அண்ணாமலை போன்ற சிறு பிள்ளைகள் உணர்ந்து கொள்வது நல்லது. கர்நாடக சட்டமன்றத் தேர்லுக்கு பொறுப்பேற்றுக் கொண்ட அண்ணாமலையால்தான், அங்கிருந்த பா.ஜ.க ஆட்சி முழுமையாக வீட்டுக்கு அனுப்பப்பட்டது என்பதை பா.ஜ.க-வும், ஆர்.எஸ்.எஸ் தலைவர்களும் உணர்ந்து கொள்வது நல்லது. அண்ணாமலையை இயக்கும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் அவரைக் கட்டுப்படுத்த வேண்டும். அல்லது அறிவுரை கூற வேண்டும். புதுச்சேரியைப் பொறுத்தமட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமையேற்ற ரங்கசாமி தலைமையில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டோம். இறுதிவரை போராடியும் அ.தி.மு.க வெற்றிபெறாமல் போனதற்கு, பா.ஜ.க-வுடன் அமைத்த கூட்டணிதான் காரணம் என்பதை மக்கள் அறிவார்கள்.
புதுச்சேரியில் பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக, சபாநாயகராக, சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பதற்கு காரணம், அ.தி.மு.க தொண்டர்களின் வாக்குகள்தான் என்பதை பா.ஜ.க மறந்துவிடக் கூடாது. அண்ணாமலை போன்ற வாய்க்கொழுப்புள்ள சிறு தலைவர்களுக்கு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நல்ல முடிவைக் கொடுப்பார்கள். அ.தி.மு.க எப்படிப்பட்ட மாபெரும் சக்தி என்பதை, அண்ணாமலையும், பா.ஜ.க-வும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் உணரும் காலம் விரைவில் வரும். தமிழகத்தில் அ.தி.மு.க-வின் நிலைபாடுதான் புதுச்சேரிக்கும். சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்காமல் புதுச்சேரியில் நாங்கள் தோல்வியடைந்ததற்கு பா.ஜ.க-தான் முக்கிய காரணம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மாண்புமிகு முதலமைச்சர் ரங்கசாமி தலைமையேற்றுள்ளார். எங்களை பொறுத்தவரை என்.ஆர் காங்கிரஸுடன் எங்கள் கூட்டணி தொடரும். கூட்டணி தொடர்பாக எடப்பாடியார் என்ன முடிவு எடுக்கிறாரோ, அந்த முடிவின்படி புதுச்சேரி அ.தி.மு.க செயல்படும். தற்போது எங்கள் தலைமை பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லையென்று அறிவித்துள்ளது. அது மிகவும் சந்தோஷமான செய்தி. தலைமையின் அந்த அறிவிப்பால், அ.தி.மு.க தொண்டர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்” என்றார்.