ரஷியா மற்றும் சீன வெளியுறவு மந்திரிகள் சந்திப்பு; உக்ரைன் போர் சூழல் பற்றி ஆலோசனை…?

மாஸ்கோ,

உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா படையெடுத்து ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதனால், எரிபொருள், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பாதிப்புகளை உலக நாடுகள் சந்தித்து வருகின்றன.

இந்நிலையில், ரஷியாவுக்கு, சீன வெளியுறவு மந்திரி வாங் யி 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக நேற்று ரஷியாவை சென்றடைந்த அவர் அந்நாட்டு வெளியுறவு மந்திரி செர்கேவை நேரில் சந்தித்து பேசினார்.

இதுபற்றி ரஷியாவின் வெளிவிவகார அமைச்சகம் எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், வெளியுறவு மந்திரிகள் செர்கே லாவ்ரவ் மற்றும் சீன வெளியுறவு மந்திரி வாங் யி ஆகியோர் சந்தித்து பேசி கொண்டனர் என தெரிவித்து உள்ளது.

உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர், ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வரும் சூழலில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் செயல்பட்டு வருகின்றன.

ஆயுதம், நிதி உள்ளிட்ட உதவிகளையும் செய்து வருகின்றன. பொருளாதார தடைகளையும் விதித்து நெருக்கடி அளிக்க முயன்றன. எனினும், இரு நாடுகள் இடையே போர் நிறுத்தம் ஏற்படாமல் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், ரஷியாவுக்கு ஆதரவாக வடகொரியா மற்றும் சீனா நாடுகள் உள்ளன. சமீபத்தில் ரஷியாவுக்கு சென்ற வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், அதிபர் புதினை சந்தித்து பேசினார். இந்த போரில் ரஷியா வெற்றி பெறும் என்ற வகையில் பேசியது சர்ச்சை ஏற்படுத்தியது.

இதுபற்றி சமீபத்தில் அமெரிக்க வெளியுறவு துறையின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, வடகொரியா மற்றும் ரஷியா இடையேயான ஆயுத விற்பனைக்கு எதிராக நாங்கள் முன்பே தடைகளை விதித்து இருக்கிறோம். தேவைப்பட்டால், கூடுதல் தடைகளை விதிக்கவும் நாங்கள் தயங்கமாட்டோம் என கூறினார்.

இந்த சூழலில், சீன வெளியுறவு மந்திரியின் பயணம் அமைந்துள்ளது. ரஷியா மற்றும் சீன வெளியுறவு மந்திரிகள் சந்திப்பில் உக்ரைன் போர் பற்றி ஆலோசிக்க கூடும் என கூறப்படுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.