டெல்லி,
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. சிறப்பு கூட்டத்தொடர் வரும் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது.
சிறப்பு கூட்டத்தொடர் நேற்று பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. நேற்றைய கூட்டத்தொடரில் நாடாளுமன்ற பழைய கட்டிடம் நாட்டின் ஜனநாயகத்திற்கு ஆற்றியுள்ள பங்களிப்பு குறித்து எம்.பி.க்கள் தங்கள் நினைவுகளை பகிர்ந்தனர்.
இதனிடையே, பழைய நாடாளுமன்ற கட்டிட மைய வளாகத்தில் இன்று அனைத்து கட்சி எம்.பி.க்கள் கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்பட பல தலைவர்கள் உரையாற்றினர்.
இந்நிலையில், பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து எம்.பி.க்கள் அனைவரும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு சென்றனர். பிரதமர் மோடி தலைமையில் மந்திரிகள், எம்.பி.க்கள் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்தனர். பிரதமர் மோடியை தொடர்ந்து எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்தனர்.
எம்.பி.க்கள் அனைவரும் புதிய நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த நிலையில் இன்னும் சற்று நேரத்தில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முதல் முறையாக மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட உள்ளது.