Bala: "என் பெயரில் மோசடி, பெண்களிடம் வாய்ப்பு தருவதாக குறுஞ்செய்தி!" புகாரளித்த இயக்குநர் பாலா

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் பாலா.

நந்தா, சேது, பிதாமகன், நான் கடவுள் போன்ற பிளாக்பஸ்டர் படங்களை இயக்கி பிரபலமான இவர். பி ஸ்டூடியோ என்ற நிறுவனத்தின் பெயரில் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். தற்போது அருண் விஜய்யை வைத்து `வணங்கான்’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்நிலையில் இயக்குநர் பாலாவின் பெயரில் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கி தவறான செயல்களில் ஈடுபட்டுள்ள நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில இயக்குநர் பாலா புகார் அளித்திருக்கிறார்.

அருண் விஜய்- பாலா

இதுகுறித்து இயக்குநர் பாலா தரப்பில் இருந்து வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில், “ எனக்கு எந்த ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கும் இல்லை. மோசடி நபர்களிடம் ஏமாற வேண்டாம். எனது பெயரில் மர்ம நபர் போலி இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கி புகைப்படங்கள் மற்றும் தகவல்களை வெளியிட்டு வருகிறார். பாலசுப்பிரமணியன் பழனிச்சாமி என்ற கணக்கில் இயக்குநர் பாலா எனக் கூறிக் கொண்டு முறையற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

குறிப்பாக திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வமுள்ள பெண்களிடம் தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்திகள் மூலமாக உரையாடி அவர்களுக்கு வாய்ப்பு தருவதாக கூறி தவறான நோக்கத்தில் பேசியுள்ளார். மேலும் கவர்ச்சியான புகைப்படங்களையும் அவர் கேட்டுள்ளார். அந்த போலி கணக்கை முடக்க வேண்டும். அதில் தொடர்புடையவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் தன் பெயரில் உள்ள போலியான அந்த கணக்கை முடக்கும்படியும் இயக்குநர் பாலா சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

பொதுவாக தனது திரைப்படங்களில் நடிப்பவர்களுக்கான தேர்வை அவரின் உதவி இயக்குநர்கள் மற்றும் மேலாளர்கள் மட்டுமே நேரடியாக தொடர்புகொண்டு வருகிறார்கள். அதனால் சினிமா ஆர்வம் உள்ளவர்கள், குறிப்பாக தனது திரைப்படங்களில் நடிக்க விரும்புபவர்கள் இது போன்ற போலியான நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். விழிப்புணர்வுடன் இருங்கள்” என்று இயக்குநர் பாலா கேட்டுக் கொண்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.