ICC World Cup 2023: 50 ஓவர்கள் வடிவத்திற்கான ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, புனே, தரம்சாலா, கொல்கத்தா, டெல்லி, அகமதாபாத், லக்னோ ஆகிய 10 நகரங்களில் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 5 போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரில் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. முதலில் ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற 9 அணிகளுடன் ஒருமுறை மோதும். இதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
குரூப் சுற்று போட்டிகள் அக். 5ஆம் தேதி தொடங்குவதற்கு முன் பயிற்சி போட்டிகளும் நடைபெற இருக்கின்றன. அந்த வகையில், செப்டம்பர் 29ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகின்றனர்.
ஒருநாள் அரங்கில் உலகின் நம்பர் 1 அணியான பாகிஸ்தான் விளையாடும் போட்டியை மாற்றியமைக்குமாறு பிசிசிஐயிடம் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் (HCA) கோரியிருந்தது. உலகின் நம்பர் 1 அணி பங்கேற்கும் வார்ம்-அப் போட்டியை பிசிசிஐ ஏற்கெனவே அறிவித்த பிறகு ஒரு முறை மாற்றியமைத்த நிலையில், எந்த மாற்றமும் செய்ய மறுத்துவிட்டது. இந்நிலையில் நடைபெற உள்ள உலகக் கோப்பைக்கான டிக்கெட் பார்ட்னரான ‘Bookmyshow’ இணையதளத்திற்கு, இந்த ஆட்டத்திற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்களுக்கு பணத்தைத் திரும்பப் அனுப்ப பிசிசிஐ வழிகாட்டுதல்களை வழங்கும் என தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ தரப்பில் வெளியான தகவல்களின் அடிப்படையில், இந்த ஆட்டம் பார்வையாளர்கள் இல்லாமல் விளையாடப்படும் மற்றும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்களுக்கு அவர்களின் பணம் திருப்பித் தரப்படும் என கூறப்படுகிறது.
செப்டம்பர் 28ஆம் தேதி முடிவடையும் கணேஷ் விசார்ஜன் மற்றும் மிலாது நபி ஆகிய பண்டிகைகளால், போதுமான பாதுகாப்பைப் வழங்க முடியாது என்பதால், விளையாட்டை ஒத்திவைக்குமாறு ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்திடம் நகர போலீஸார் கேட்டுக் கொண்டனர். ஏற்கனவே ஒரு முறை அட்டவணை மாற்றப்பட்டது, ஏற்பாட்டாளர்களால் கோரிக்கையை ஏற்க முடியவில்லை. எனவே, போட்டிக்கு பார்வையாளர்கள் நுழைவதை தடை செய்ய முடிவு செய்துள்ளனர்.
அக்டோபர் 9 மற்றும் அக்டோபர் 10 ஆகிய தேதிகளில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ள இரண்டு உலகக் கோப்பை லீக் ஆட்டங்களுக்கு பாதுகாப்பு முகமைகள் முன்பே எச்சரிக்கை விடுத்தன, இருப்பினும், தற்போது அந்த பிரச்னை தீர்ந்துள்ளது. அக்டோபர் 9ஆம் தேதி நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதும் ஆட்டம், அக்டோபர் 10ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. ஒரு ஆட்டத்திற்கு சுமார் 3,000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். மேலும் பாகிஸ்தான் அணி இருக்கும் ஹோட்டலில் ஏராளமான போலீசார் பாதுகாப்பில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது.