நாமக்கல்: சவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தனியார் ஹோட்டலுக்கு கோழி இறைச்சி சப்ளை செய்த இறைச்சிக் கடை உரிமையாளரை காவல் துறையினர் கைது செய்தனர்.
நாமக்கல் பழைய நகராட்சி அலுவலகம் அருகே உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் சவர்மா எனப்படும் கோழி இறைச்சி சாப்பிட்ட பள்ளி மாணவி கலையரசி (14) என்பவர் நேற்று உயிரிழந்தார். மேலும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அதே ஹோட்டலில் சவர்மா சாப்பிட்ட 11 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்பட 43 பேர் அரசு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவத்தையடுத்து தனியார் ஹோட்டலுக்கு மாவட்ட ஆட்சியர் ச.உமா உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டது. மேலும், ஹோட்டல் உரிமையாளர் நவீன்குமார், சமையலர்கள் இருவர் என மொத்தம் 3 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். தவிர, மாவட்டம் முழுவதும் சவர்மா, கிரில் சிக்கன் விற்பனை செய்யவும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மாவட்ட ஆட்சியர் உத்திரவின் பேரில் நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் டாக்டர் அருண் தலைமையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பு அலுவலர், அந்தந்த உள்ளாட்சி அமைப்பில் உள்ள சுகாதார அலுவலர்கள் அந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள ஹோட்டல்கள், ஃபாஸ்ட் புட் உணவகங்கள், மீன் இறைச்சிக் கடைகள், கறிக்கோழிக்கடைகள் உள்ளிட்ட கடைகளை சோதனையிட்டனர். மொத்தம் 210 உணவங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 10 கடைகளில் சுகாதாரமற்ற முறையில் உணவு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
![](https://static.hindutamil.in/hindu/uploads/common/2023/09/19/16951286172888.jpg)
அந்த உணவங்களுக்கு மாவட்ட சுகாதார அலுவலர் அருண் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதனிடையே மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தனியார் ஹோட்டலுக்கு கோழி இறைச்சி விற்பனை செய்த நாமக்கல் ராமாபுரம்புதூரைச் சேர்ந்த கோழி இறைச்சிக் கடை உரிமையாளர் சீனிவாசன் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை செய்ததாக உணவு பாதுகாப்புத் துறையினர் அளித்த புகாரின் பேரில் அவரை கைது செய்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.