மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: 27 ஆண்டுக்கால கனவும், கால தாமத அரசியலும்!

அரசியலில் மகளிருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும், சட்டத்தின் மூலம அதை உறுதிசெய்ய வேண்டும் என்பது பற்றிய விவாதம் சுதந்திரத்துக்கு முன்னரும், அரசியல் சாசன சபையிலும் நடைபெற்றது. 1987-ம் ஆண்டு ராஜீவ் காந்தி தலைமையிலான அரசு அன்றைய மத்திய அமைச்சர் மார்கரெட் ஆல்வா தலைமையில் 14 பேர்கொண்ட குழு ஒன்றை அமைத்தது. 

ராஜீவ் காந்தி

அந்தக் குழு ஏராளமான பரிந்துரைகளை அரசுக்கு அளித்தது. அதையடுத்து, உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து மட்டங்களிலும் மகளிருக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு உறுதிசெய்யப்பட்டது. பல மாநிலங்களில், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டுக்குள் மகளிருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற குரல் வலுவடைந்தது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை 1996-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி தேவகவுடா தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அதற்கு கட்சி எல்லைகளைக் கடந்து ஆதரவு கிடைத்தது. ஒரே நாளில் அந்த மசோதாவை ஏகமனதாக நிறைவேற்ற எம்.பி-க்கள் முயன்றனர்.

தேவ கவுடா

ஆனால், சரத் யாதவ் போன்ற சில எம்.பி-க்கள் அதைக் கடுமையாக எதிர்த்தனர். ஆகையால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான கீதா முகர்ஜி தலைமையிலான நாடாளுமன்றத் தேர்வுக் குழுவுக்கு மசோதா அனுப்பப்பட்டது. அந்தக் குழுவில், சரத் பவார், நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, உமாபாரதி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் இடம்பெற்றனர். அந்தக் குழு, சில பரிந்துரைகளை அளித்தது. மீண்டும் 1996-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நிறைவேற்றப்படவில்லை.

1998-ம் ஆண்டு, வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க அரசு வந்த பிறகு, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பா.ஜ.க தலைவர் சுமித்ரா மகாஜன் உள்ளிட்ட எம்.பி-க்கள், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை அறிமுகப்படுத்தக் கோரி நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தனர். அந்த ஆட்சியிலும் நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்ய முயன்றபோது, ​​ஆர்.ஜே.டி எம்.பி-க்களான சுரேந்திர பிரகாஷ் யாதவ், அஜித் குமார் மேத்தா ஆகியோர் மசோதாவின் நகல்களை கிழித்தெறிந்தனர். அவர்களின் செயலுக்கு லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.

லாலு பிரசாத் யாதவ்

1999-ல் வாஜ்பாய் மீண்டும் பிரதமரான பிறகு, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதையடுத்து, 1999-ம் ஆண்டு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரின்போது, ​​மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை சட்ட அமைச்சர் ராம் ஜெத்மலானி அறிமுகப்படுத்தினார். அதற்கு, முலாயம் சிங் யாதவ், ரகுவன்ஷ் பிரசாத் சிங் உள்ளிட்ட எம்.பி-க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

2005-ல் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசு நடைபெற்றபோது, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து ஒருமித்தக் கருத்தை ஏற்படுத்த சோனியா காந்தி ஒரு கூட்டத்தைக் கூட்டினார். அதில் ஐ.மு கூட்டணிக் கட்சிகளும், அந்த அரசுக்கு ஆதரவு அளித்த இடதுசாரிக் கட்சிகளும் கலந்துகொண்டன. பின்னர், மகளிர் இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள், பிற கட்சிகளின் தலைவர்களை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்தார்.

சோனியா காந்தி

நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்களில் மகளிருக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை வழங்கும் மசோதா, 2008-ம் ஆண்டு மே 8-ம் தேதி பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள், சட்டம் மற்றும் நீதிக்கான நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. நிலைக்குழு தனது அறிக்கையை 2009-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி அளித்தது. மன்மோகன் சிங் அமைச்சரவை 2010-ம் ஆண்டு பிப்ரவரி 25-ம் தேதி மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா மார்ச் 9-ம் தேதி மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும், ஐ.மு.கூட்டணி கட்சிகளுக்கு உள்ளேயும், அமைச்சரவைக்கு உள்ளேயும் கருத்து வேறுபாடுகள் இருந்ததால், மக்களவையில் மசோதா கொண்டுவரப்படவில்லை.

மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவோம் என்று 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வாக்குறுதி அளித்தது. ஆனால், தேர்தலில் வெற்றிபெற்ற பா.ஜ.க., அந்த ஐந்தாண்டு காலத்தில் மகளிர் இட ஒதுக்கீடு பற்றிய பேச்சையே எடுக்கவில்லை. 2019 நாடாளுமன்றத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க., கடந்த நான்கரை ஆண்டுகளில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா பற்றிய பேச்சையே எடுக்கவில்லை. பிரிவு 370-ஐ நீக்குவது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது உள்ளிட்ட தனது முக்கிய அஜண்டாக்களை வெற்றிகரமாக நிறைவேற்றிய பா.ஜ.க., மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை கண்டுகொள்ளாமலேயே இருந்தது.

மோடி

இன்றைக்கு (செப். 19) நாடாளுமன்றத்தின் பழைய கட்டடத்திலிருந்து புதிய கட்டடத்துக்கு மாறிய நிலையில், அமர்வின் முதல் நாளிலேயே மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைத் தாக்கல் செய்திருக்கிறார்கள். பா.ஜ.க-வுக்கு மக்களவையில் அறுதிப்பெரும்பான்மை இருந்தாலும், மாநிலங்களவையில் மசோதாக்களை நிறைவேற்ற போதுமான எண்ணிக்கை பா.ஜ.க-வுக்கு இல்லை. அங்கு, ஜெகன்மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக் ஆகியோரின் ஆதரவுடன் மசோதாக்களை பா.ஜ.க அரசு நிறைவேற்றிவருகிறது. அதே பாணியில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவையும் மோடி அரசு நிறைவேற்றுமா?!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.