புதுடெல்லி: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவின் முதல் கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்தியாவில் 1967 வரை 4 தேர்தல்கள் மக்களவைக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன. ஆனால் 1968-69-ல் சில மாநிலங்களில் அரசுகள் கலைக்கப்பட்டதால் இந்த நடைமுறை நிறுத்தப்பட்டது. மேலும் மக்களவையும் 1970-ல் அதன் பதவிக் காலத்திற்கு ஓராண்டுக்கு முன்னதாக கலைக்கப்பட்டது. 1971-ல் இடைக்கால தேர்தல் நடத்தப்பட்டது. இதனால் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தலை சந்திக்கும் நடைமுறை சீர்குலைந்தது.
தற்போது ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு மாநிலத்தில் தேர்தல் நடைபெற்று வருவதால் செலவு அதிகரிப்பதுடன் பாதுகாப்பு படையினர் மற்றும் அரசு ஊழியர்களின் அலுவல்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்படுவதால் வளர்ச்சிப் பணிகள் தடைபடுகின்றன.
இந்நிலையில் மக்களவைக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக தலைவர்களும் வலியுறுத்தி வந்தனர். 2014-ல் பாஜக தனது தேர்தல் அறிக்கையில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கான வழிமுறையை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்திருந்தது.
இந்நிலையில் ‘ஒரே நாடு ஒரேதேர்தல்’ திட்டம் குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு கடந்த 2-ம் தேதி குழு அமைத்தது. இக்குழுவின் உறுப்பினர்களாக மத்திய உள்துறைஅமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர்ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத், 15-வது நிதிக்குழுவின் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, மத்திய ஊழல் தடுப்பு பிரிவின் முன்னாள் தலைவர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.
இக்குழவின் கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராக மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம்மேக்வால் பங்கேற்பார், குழுவின் செயலாளராக மத்திய சட்டத் துறை செயலாளர் நிதின் சந்திராசெயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டது.
மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புகளை இக்குழு ஆராய்ந்து பரிந்துரைகளை அளிக்கும் என மத்திய அரசு தெரிவித்தது.
ஆனால் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’முறைக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.மாறாக, அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பான ராம்நாத் கோவிந்த் குழுவில் இடம்பெற மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மறுத்துவிட்டார். இந்நிலையில் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றின்பட்டமளிப்பு விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று கலந்துகொண்டார்.
அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பாக தனது தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவின் முதல் கூட்டம் செப்டம்பர் 23-ல் நடைபெற உள்ளது என்றார்.