பெங்களூரு : கர்நாடகாவில் சொத்துக்களின் வழிகாட்டி மதிப்பை, 30 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அக்., 1ம் தேதி முதல், இதை அமல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதேவேளையில், இவை குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கொண்டு வரப்படும் என்றும், ஆட்சேபனை, ஆலோசனைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.
பெங்களூரில் நேற்று, வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா அளித்த பேட்டி:
சொத்து பதிவு வழிகாட்டி மதிப்பை உயர்த்துவது குறித்து ஏற்கனவே ஆலோசித்து, முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சொத்துக்கள் பதிவு வழிகாட்டி விகிதங்கள் திருத்தப்பட வேண்டும் என்ற விதி உள்ளது.
ஆனால், பல ஆண்டுகளாக இந்த கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதற்காக, சொத்து பதிவு வழிகாட்டு விகிதத்தை, 30 சதவீதம் உயர்த்தி உள்ளோம். அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும்.
மாநிலம் முழுதும் வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்படாது. சில பகுதிகளில் சந்தை விலையை விட, வழிகாட்டி விகிதத்தில் அதிகரிப்பு இருந்தால், அத்தகைய பகுதிகளில் கட்டண உயர்வு இருக்காது. அதேவேளையில், சந்தை விலையை விட, வழிகாட்டி விகிதம் மிகவும் குறைவாக உள்ள பகுதிகளில், சொத்து பதிவு விகிதம் கண்டிப்பாக அதிகரிக்கும்.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் பகுதிகள், விமான நிலையங்கள் கட்டப்படும் இடங்கள், பெங்களூரு உட்பட மாநிலத்தின் பல பகுதிகளில் ஐ.டி., – பி.டி., நிறுவனங்கள் அமைக்கப்படும் இடங்களில் வழிகாட்டி மதிப்பு குறைவாக உள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் வழிகாட்டி விலையில் உயர்வு இருக்கும்.
தற்போது 30 சதவீதம் வழிகாட்டி விகிதம் அதிகரித்துள்ளது தொடர்பாக, ஆட்சேபனை, ஆலோசனை இருந்தால் தெரிவிக்க வாய்ப்பு உள்ளது.
இதை அமல்படுத்தினால், அரசுக்கு ஆண்டுக்கு, 2,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். மாநில வளர்ச்சி பணிகளை எளிதாக்க உதவும். புதிய திட்டத்தை அமல்படுத்தினால் எதிர்ப்பு வருவது சகஜம். இதை சரி செய்வோம்.
மாநிலத்தில் வழிகாட்டுதல் கட்டணங்கள் அதிகரிப்பதால், சில வேறுபாடுகள் தோன்றும். அது இரண்டு மாதங்களில் சரியாகிவிடும். சொத்து விற்பனையின் போது, கருப்பு பணம் பயன்படுத்தப்படுகிறது. அதை அனுமதிக்க கூடாது என்பதே எங்களின் முடிவு.
* ரூ. 6,000 கோடி
கர்நாடகாவில் 195 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தாலுகாக்களில் இருந்து பயிர் சேத விபரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன.
இதுவரை கிடைத்த தகவலின்படி, 1.03 கோடி ஏக்கர் விவசாய பயிர்களும், 4.94 லட்சம் தோட்டக்கலை பயிர்களும் சேதமடைந்துள்ளன. பயிர் சேதம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
என்.டி.ஆர்.எப்., எனும் தேசிய பேரிடர் நிவாரண நிதியின் வழிகாட்டுதலின்படி, விவசாய பயிர் சேதத்துக்கு 4,000 கோடி ரூபாயும்; தோட்டக்கலை பயிர் சேதத்துக்கு 2,00 கோடி ரூபாயும் வழங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. குடிநீர், தீவனம் உட்பட உதவித்தொகையாக, மொத்தம் 6,000 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும்.
வறட்சி பாதித்த தாலுகாக்கள் பட்டியலில், 41 தாலுகாக்கள் இல்லை. இந்த தாலுகாக்களின் நிலைமை, மாத இறுதியில் மீண்டும் மதிப்பாய்வு செய்யப்படும். 15 தாலுகாக்களை வறட்சி தாலுகா பட்டியலில் சேர்க்க, உள்ளூர் எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தி வருகின்றனர். விரைவில் முடிவெடுக்கப்படும்.
மாவட்ட கலெக்டரின் தனிப்பட்ட கணக்கில், 492 கோடி ரூபாய் உள்ளது. குடிநீர் வினியோகம் உட்பட அவசர பணிகளுக்கு நிதி பற்றாக்குறை இல்லை. 13 கிராமங்களில் மட்டும் டேங்கர் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. 131 குடியிருப்புகளில் ஆழ்குழாய் கிணறுகளை வாடகைக்கு எடுத்து, குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. நகர்ப்புறங்களில் உள்ள 60 வார்டுகளில் மட்டுமே குடிநீர் பிரச்னை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கர்நாடகாவில் ஏற்கனவே பால், மின்சார கட்டணம் உயர்வால் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், பட்டியல் ஜாதியினர், பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட மானியங்கள், காங்கிரஸ் அரசு அறிவித்த இலவச திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
தற்போது, சொத்துக்களின் வழிகாட்டி மதிப்பு 30 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டு இருப்பது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
***
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்