புதுடெல்லி: பழைய நாடாளுமன்ற கட்டிடம் அரசியல்சாசன அவை என்று அழைக்கப்படும் என பிரதமர் மோடி நேற்று அறிவித்தார்.
நாடாளுமன்றத்தின் பழைய கட்டிடம் பற்றி நேற்று முன்தினம் புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி, எம்.பி.க்கள், புதிய நம்பிக்கையுடன் புதிய நாடாளுமன்றத்துக்குள் நுழைவர் என குறிப்பிட்டார். இந்நிலையில், நாடாளுமன்ற பழைய கட்டிடத்துக்கு பிரியா விடையளிக்கும் வகையில் மைய மண்டபத்தில் நேற்று கடைசியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
விநாயகர் சதுர்த்தி புனித நாளில் நாம் இங்கிருந்து விடைபெற்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு செல்கிறோம். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான உறுதியுடனும் தீர்மானத்துடனும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நோக்கி நாம் செல்கிறோம். இந்த அவையில்தான் அரசியல் சாசனம் உருவானது. இந்த மைய மண்டபத்தில் நாட்டின் தேசியக் கொடியும், தேசிய கீதமும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1952-க்குப் பிறகு உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 41 நாடுகளின் தலைவர்கள் இந்த மண்டபத்தில் உரையாற்றியுள்ளனர். இந்தியாவின் பல குடியரசுத் தலைவர்கள், 86 முறை இங்கு உரையாற்றி உள்ளனர்.
கடந்த 70 ஆண்டுகளில் மக்களவையும் மாநிலங்களவையும் சுமார் 4 ஆயிரம் சட்டங்களை நிறைவேற்றியுள்ளன. இந்த அவையில் இயற்றப்பட்ட ஒவ்வொரு சட்டமும், நடந்த ஒவ்வொரு விவாதமும், இங்கு எடுக்கப்பட்ட ஒவ்வொரு முடிவுகளும் இந்தியாவின் உயர்ந்த லட்சியங்களை ஊக்குவிக்க வேண்டும்.
இந்த அவையின் பெருமை ஒருபோதும் குறையக் கூடாது. என்னிடம் ஒரு ஆலோசனை உள்ளது. இதை பழைய நாடாளுமன்றம் என நாம் அழைக்கக் கூடாது. இதை ‘சம்விதான் சதன்’ (அரசியல்சாசன அவை) என அழைக்க அனுமதிக்கும்படி மக்களவை சபாநாயகர் மற்றும் மாநிலங்களவை தலைவரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.
அப்போதுதான் இது நமக்கு எப்போது உற்சாகம் அளிக்கும். சம்விதான் சதன் என நாம் அழைக்கும்போது, இந்த அரசியல் சாசன அவையில் அமர்ந்த சிறந்த தலைவர்களை நாம் நினைவு கூற முடியும். வரும் தலைமுறையினருக்கு இந்தப் பரிசை வழங்கும் வாய்ப்பை நாம் நழுவவிட கூடாது. ஆலோசனைக்குப்பின், இந்த வேண்டுகோளை நீங்கள் பரிசீலிப்பீர்கள் என நம்புகிறேன். அரசியல் கட்சிகள் அரசியல் ஆதாயத்தை மட்டும் நினைக்காமல், நாட்டின் எதிர்காலம் பற்றி சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அதன்பின் அனைத்து எம்.பி.க்களும் பிரதமர் மோடி தலைமையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு நடந்து சென்றனர்.
96 வயது: நாடாளுமன்றத்தின் பழைய கட்டிடம் ஆங்கிலேய கட்டிடக் கலை நிபுணர்கள் சர் எட்விட் லத் யென்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் என்பவர்களால் வடிவமைக்கப்பட்டது. 1927-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட பழைய நாடாளுமன்றம் 96 ஆண்டுகள் பழமையானது. தற்போதைய தேவைகளுக்கு, இது போதுமானதாக இல்லாததால், கூடுதல் வசதிகளுடன் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டது.