சேலம் / ஈரோடு: சேலத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட பெண்கள் மேல்முறையீடு செய்வதற்காக வந்த நிலையில் சர்வர் முடங்கியதால் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். சமரசம் செய்ய வந்த அதிகாரிகளிடம் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதியின்படி கடந்த 15-ம் தேதி தமிழகம் முழுவதும் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில், இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்த சுமார் 56 லட்சம் பெண்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதையடுத்து நிராகரிக்கப்பட்ட பெண்கள் கடந்த 18-ம் தேதி முதல் 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களின் இ-சேவை மையங்களில் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள் நேற்று முதல் மேல்முறையீடு செய்து வருகின்றனர்.
சேலம் அஸ்தம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மேல்முறையீடு செய்ய நேற்று காலை ஏராளமான பெண்கள் திரண்டு வந்திருந்தனர். அப்போது, சர்வர் முடங்கியதால் பெண்கள் நீண்ட நேரம் காத்திருக்க வைக்கப்பட்டனர். இதனால், கோபமடைந்த பெண்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
ஏழை, எளிய பெண்களின் விண்ணப்பங்களை நிராகரித்துள்ளதோடு, வசதி படைத்த பெண்களின் கணக்குகளில் உரிமைத் தொகை ரூ.ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளது. தற்போது, மீண்டும் பெண்களை அலைக்கழிப்பது நியாயமா? என்று பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்தனர்.
இதுகுறித்து பெண்கள் கூறும் போது, ‘தேர்தல் வாக்குறுதியில் பெண்கள் அனைவருக்கும் மாதம் தோறும் உரிமைத் தொகையாக ரூ.ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்துவிட்டு, 56 லட்சம் பெண்களின் விண்ணப்பங்களை நிராகரித்துவிட்டு, மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என அலைக்கழிப்புக்கு உள்ளாக்கி வேதனையடைய வைக்கின்றனர்’ என குற்றம்சாட்டினர்.
ஈரோட்டில் மறியல்: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற, ஈரோடு மாவட்டத்தில் 5.38 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இதில், 2.16 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள் நேற்று, திருமகன் ஈவெரா சாலையில் உள்ள ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் வட்டாட்சியர் ஜெயக்குமார் கூறியதாவது: உதவித்தொகை கிடைக்காதவர்களுக்கு உதவும் வகையில், வட்டாட்சியர் அலுவலகத்தில் 3 அதிகாரிகள் கொண்ட உதவி மையம் செயல்பட்டு வருகிறது. அவர்களிடம் உங்களுக்கான சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளலாம். இதுவரை உரிமைத் தொகைத் கிடைக்காதவர்களுக்கு, வரும் 23-ம் தேதிக்குள் வங்கிக் கணக்கில் பணம் சேர்க்கப்படும், என்றார். இதையடுத்து மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.