மாநில சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற மக்களவையில் மகளிருக்கு 33 சதவிகித இடங்களை ஒதுக்கும் வகையிலான ‘மகளிர் இட ஒதுக்கீடு மசோதா’, புதிய நாடாளுமன்றத்தில் தற்போது நடந்துவரும் சிறப்புக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படவிருப்பதாகக் கூறப்பட்டது. நேற்று மாலை நடைபெற்ற மத்திய அமைச்சரவையில் இதற்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை இன்று மக்களவையில் தாக்கல் செய்தார் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/WhatsApp_Image_2023_09_19_at_1_30_11_PM__1_.jpeg)
முதல்முறையாக இந்த மசோதா 1996-ல், அப்போதைய பிரதமர் ஹெச்.டி.தேவகவுடா தலைமையிலான அரசால் கொண்டுவரப்பட்டது. அன்றுமுதல் 27 ஆண்டுகளாக இந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை. இடையில் 2010-ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், கூட்டணியிலிருந்த சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் இந்த மசோதா விவகாரத்தில் பின்வாங்கியதால் மக்களவையில் நிறைவேற்ற முடியாமல் போனது.
அதன் பிறகு, கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக மத்தியில் பா.ஜ.க ஆட்சியிலிருந்தபோதும்கூட, இந்த மசோதா இப்போதுதான் நிறைவேற்றப்படுவதற்கான சூழல் வந்திருக்கிறது. காங்கிரஸும் தற்போது இதற்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாகத் தெரிவித்திருக்கிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/F6ZSOb8W8AAPyVh.jpeg)
இந்நிலையில், இதுகுறித்து பலரும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் அரசியல், சினிமா குறித்து வெளிப்படையான கருத்துகளைத் தெரிவித்து வரும் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், “இது ஒரு அற்புதமான யோசனை. இதற்குக் காரணம் நமது பிரதமர் மோடி மற்றும் இந்த அரசாங்கம். புதிய நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர், பெண்கள் அதிகாரம் மற்றும் மேம்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பெண்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளார். பா.ஜ.க இன்று வேறு எந்த மசோதாவையும் கொண்டு வந்திருக்கலாம். ஆனால், அவர்கள் பெண்களுக்கான அதிகாரத்தைத் தேர்வு செய்திருக்கின்றனர். இது அவர்களின் சிந்தனையைக் காட்டுகிறது. நாடு திறமையானவர்களின் கைகளில் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.