காஞ்சிபுரம்: அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்க காஞ்சிபுரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன்.கடந்த 17-ம் தேதி காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் பைக்கில் அதிவேகமாக சென்றபோது வீலிங் செய்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது வலது கை முறிந்தது. அவரது பைக் பல அடி தூரத்துக்கு பறந்து போய் விழுந்தது.
இந்தச் சம்பவத்தை அடுத்து, அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் பாலுசெட்டிசத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அன்றைய தினமே, டிடிஎஃப் வாசன் தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது. அந்தக் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்திருந்தது.
இந்நிலையில், டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கக் கோரி, அவரது தரப்பு வழக்கறிஞர்கள், காஞ்சிபுரம் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி செம்மல் முன்பு இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. யூடியூபர் டிடிஎஃப் வாசன் தொடர்ந்து இதுபோன்ற பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். சட்டப்பிரிவு 308-வது பிரிவின் கீழ் கொலை ஆகாத மரணத்தை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டதன் காரணமாக அவரது ஜாமீன் மனுவை நிராகரித்து உத்தரவிட்டார்.