காரைக்குடி: காரைக்குடி ரயில் நிலையத்தில் வசதிகள் குறைவால் பயணிகள் அன்றாடம் அளவில்லாத சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
காரைக்குடி ரயில் நிலையம் முக்கியச் சந்திப்பாக உள்ளது. இங்கு 5 நடைமேடைகள் உள்ளன. வாராந்திர ரயில்கள் உட்பட 26 ரயில்கள் நின்று செல்கின்றன. இதனால், தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் வசதி குறைவான, கவனிப்பில்லாத நிலையமாக உள்ளது.
ரூ.2.34 கோடியில் மின்தூக்கியுடன் கூடிய புதிய நடைமேம்பாலப் பணி 2019-ம் ஆண்டு தொடங்கியது. ஆனால், 4 ஆண்டுகளாகியும் முடிவடையாமல் உள்ளது. எந்த நடைமேடையிலும் `கோச் இன்டிகேஷன் டிஜிட்டல்’ பலகை இல்லை.
![](https://static.hindutamil.in/hindu/uploads/common/2023/09/21/16952907502006.jpg)
வெளியூர்களில் இருந்து பயணிகள் தங்கும் வகையில் போதிய ஓய்வறைகள் இல்லை. வடிகால் வசதி இல்லாததால் மழைக் காலங்களில் ரயில் நிலையம் முன்பாக தண்ணீர் தேங்கி சிரமத்தை ஏற்படுத்துகிறது. இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் அதிகபட்சம் 50 வாகனங்கள் மட்டுமே நிறுத்த முடியும். இதனால் மற்ற வாகனங்கள் மழை, வெயிலில் நிறுத்தும் நிலை உள்ளது.
![](https://static.hindutamil.in/hindu/uploads/common/2023/09/21/16952907882006.jpg)
கழிப்பறைகள்
ரயில் நிலையம் முன்பு மற்றும் 5-வது நடைமேடையில் போதிய மின்விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் இருட்டாக உள்ளது. இதனால், பயணிகள் அச்சத்துடன் இருக்கும் நிலை உள்ளது. பல்லவன் ரயில் வரும் சமயத்தில் மட்டுமே பேருந்து வசதி உள்ளது. மற்ற நேரங்களில் கூடுதலாக கட்டணம் கொடுத்து ஆட்டோக்களில் பய ணிக்கும் நிலை உள்ளது.
![](https://static.hindutamil.in/hindu/uploads/common/2023/09/21/16952907632006.jpg)
இது குறித்து காரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவர் சாமி திராவிடமணி கூறியதாவது: விரைவு ரயில்கள் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே நிற்கும். கோச் இன்டிகேஷன் டிஜிட்டல் பலகை இல்லாததால் பயணிகள் ரயில்களில் ஏற சிரமப்படுகின்றனர். ரயில் நிலையம் வெளியே பல லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட கழிப்பறைகள் பல ஆண்டுகளாக திறக்கப்படவில்லை.
ரயில் நிலையத்துக்குப் போதிய பேருந்து வசதி இல்லாததால் பயணிகள் ரூ.100 முதல் ரூ.250 வரை கட்டணம் கொடுத்து ஆட்டோக்களில் பயணிக்கும் நிலை உள்ளது.
குற்றங்களைக் கண்காணிக்க முக்கிய ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.