`வடக்கு வாழ்கிறது, வளருகிறது… தெற்கு தேய்கிறது, தேயும் தெற்கில் இவர்களோ மேய்கிறார்கள்…’ என்று பேரறிஞர் அண்ணா சொன்னது எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ, இனி நடைபெறவிருக்கும் 2026-க்குப் பிறகான தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு கணக்கச்சிதமாகப் பொருந்தப்போகிறது! மக்கள்தொகை அடிப்படையில் 2026-ம் ஆண்டுக்குப் பிறகு, மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும்போது, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் என்றும், உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் கார்னேஜி மையம் (Carnegie Report) ஓர் அதிர்ச்சிகரமான ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/india_.jpg)
2026-ல் மீண்டும் தொகுதி மறுவரையறை:
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் மற்றும் எண்ணிக்கை என்பது மக்கள்தொகை அடிப்படையில்தான் வரையறை செய்யப்படுகிறது. அந்த வகையில், ஒவ்வொரு தொகுதியிலும் தோராயமாக ஒரே எண்ணிக்கையிலான வாக்காளர்கள் இருப்பதை அரசுகள் உறுதி செய்யும். மேலும், மக்கள்தொகை அதிகரிப்பதற்கேற்ப தொகுதிகளும் மறு சீரமைப்பு செய்யப்படும். ஆனால், 1976-ம் ஆண்டு முதல் தொகுதி மறுவரையறை செய்யும் நடவடிக்கையை 2000-ம் ஆண்டுவரை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. மேலும், 2001-ம் ஆண்டுவாக்கில் அந்த தடையை 2026-ம் ஆண்டுவரை நீட்டித்து உத்தரவிட்டது. இந்த நிலையில், 2026-ம் ஆண்டுக்குப் பிறகு மக்கள்தொகை அடிப்படையில் மீண்டும் நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை செய்யப்படவிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
அதிரவைக்கும் ஆய்வறிக்கை:
இந்த நிலையில், கார்னேஜி மையம் (Carnegie Report) வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையில், “தென்னிந்திய மாநிலங்களைவிட வட இந்திய மாநிலங்களில் மக்கள்தொகை வளர்ச்சி என்பது மிகவும் வேகமாக இருக்கிறது. மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என்பதால், ஒப்பீட்டளவில் வட இந்திய மாநிலங்களில் தற்போது இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதேசமயம் மக்கள்தொகை கட்டுக்குள் இருக்கும் தென் மாநிலங்களின் நாடாளுமன்றத் தொகுதிகள் கணிசமாகக் குறையும்… அதாவது இப்போது இருக்கின்ற தொகுதிகளில் பெரும் இழப்பு நேரிடும்!” என அதிர்ச்சி தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/south_india_region_map_labelled_black_vector_27671543.jpg)
உத்தரப்பிரதேசம் `டாப்’… தமிழ்நாடு `ட்ராப்’
மேலும், “2026-க்குப் பிறகு மக்கள்தொகை கணக்கிடப்பட்டு, அதனடிப்படையில் செய்யப்படும் மக்களவைத் தொகுதிகள் மறுவரையறையில், வட மாநிலங்கள் கூடுதலானத் தொகுதிகளைப் பெறும். குறிப்பாக, இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேசத்தில் தற்போது 80 மக்களவைத் தொகுதிகள் இருக்கின்றன. ஆனால், தொகுதி மறுவரையறைக்குப் பின்னர் கூடுதலாக 11 தொகுதிகளைப் பெற்று, உ.பி-யின் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 91-ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, தொகுதி மறுவரையறைக்குப் பின்னர் இப்போது இருக்கும் தொகுதிகளைவிட பீகார் மாநிலம் கூடுதலாக 10 தொகுதிகளையும், ராஜஸ்தான் மாநிலம் 6 தொகுதிகளையும், மத்தியப் பிரதேசம் 4 தொகுதிகளையும் கூடுதலாகப் பெறும். அதேபோல குஜராத், ஹரியானா, ஜார்க்கண்ட், டெல்லி (யூனியன் பிரதேசம்), சத்தீஸ்கர் உள்ளிட்ட வட மாநிலங்களும் தலா 1 மக்களவைத் தொகுதியை அதிகமாகப் பெறும்!” என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/10/India___Political1_page_0001.jpg)
8 தொகுதிகளை இழக்கும் தமிழ்நாடு:
“அதேசமயம்,`நாம் இருவர் நமக்கு இருவர்’ என மக்கள்தொகைக் கட்டுப்பாட்டை பொறுப்புணர்வுடன் செயல்படுத்திய தென் மாநிலங்கள், அந்த பொறுப்புணர்வுக்காகவே தண்டிக்கப்படவிருக்கின்றன. அதாவது, இருக்கின்ற தொகுதிகளையும் கணிசமாக இழக்கப்போகின்றன. குறிப்பாக, தமிழ்நாடு மாநிலம் தற்போது 39 மக்களவைத் தொகுதிகளை வைத்திருக்கிறது. ஆனால், 2026-க்குப் பிறகான மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பால் கிட்டத்தட்ட 8 மக்களவைத் தொகுதிகளை இழக்கும். தமிழ்நாட்டின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை வெறும் 31-ஆக குறையும். தமிழ்நாட்டைப்போலவே இதர தென் மாநிலங்களான கேரளா இப்போதிருக்கும் 20 தொகுதிகளில் 8 தொகுதிகளை இழந்து 12-ஆகச் சுருங்கும். ஆந்திரா-தெலங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களையும் சேர்த்து மொத்தம் 42 மக்களவைத் தொகுதிகள் இருக்கும் நிலையில், அவை 34-ஆக குறையும். கர்நாடகாவும் தற்போதைய 28-லிருந்து 2 இடங்களை இழந்து 26 இடங்களாகச் சுருங்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது!” என்று கார்னேஜி அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
`சென்ட்ரல் விஸ்டா’ கட்டுமானத்தின்போதே எழுந்த சர்ச்சை:
சமீபத்தில்தான் `சென்ட்ரல் விஸ்டா’ எனும் புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டு, பிரதமர் மோடி திறந்து வைத்தார். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானத்தின்போதே மத்திய அரசு வெளியிட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் அடங்கிய விவரங்கள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தின. குறிப்பாக, கட்டடத்தில் மக்களவை, மாநிலங்களவைக் கூட்டம் நடக்கும் `மீட்டிங் ஹாலின்’ இருக்கைகள் ஏற்கெனவே உள்ள பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் இருந்ததைவிட இரு மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தன. உதாரணமாக, தற்போது மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 543-ஆகவும் மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை 245-ஆகவும் இருக்கின்றன. அதற்கேற்ற வகையில்தான் பழைய நாடாளுமன்றக் கட்டடத்தின் இரு அவைகளின் இருக்கைகளும் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் மக்களவையில் 888 இருக்கைகள், மாநிலங்களவையில் 384 இருக்கைகள் என மொத்தம் 1272 இருக்கைகள் கூடுதலாக அமைக்கப்பட்டிருந்தன.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/Untitled_design__14_.jpg)
இதை சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சிகள் அப்போதே, `நாடாளுமன்ற உறுப்பினர்களின் இருக்கைகள் அதிகப்படுத்தப்பட்டிருப்பதால், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை பா.ஜ.க மறுசீரமைப்பு செய்யவிருக்கிறது’ என சந்தேகங்களை முன்வைத்தன. குறிப்பாக, தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகள் எண்ணிக்கை பின்னடைவைச் சந்திக்கும் என்றும், பா.ஜ.க ஆதிக்கமுள்ள உத்தரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களின் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், தென் மாநிலத் தலைவர்கள் அச்சம் தெரிவித்தனர். இந்த நிலையில், கார்னேஜி அறிக்கையும் இதை உறுதிப்படுத்தியிருக்கிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/GridArt_20230907_124024279.jpg)
`தலைக்கு மேல் தொங்கும் கத்தி’ – முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசின் இந்த தொகுதி வரையறை விவகாரத்துக்கு கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாட்டின்மீது… தென்னிந்தியாவின்மீது தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக தொகுதி மறுவரையறை உள்ளது. மக்கள்தொகை அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, தென்னிந்தியாவின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கிற அரசியல் சூழ்ச்சி முறியடிக்கப்பட வேண்டும். அரசியல் விழிப்புமிக்க தமிழ்நாட்டை வஞ்சிக்கிற அநீதியான முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்” என கண்டனம் தெரிவித்திருப்பதோடு, “மறுவரையறை என்ற பெயரில் தென்னிந்திய மக்களுக்கு எந்தத் தீங்கையும் செய்துவிட மாட்டோம் என்ற உத்தரவாதத்தை வழங்கி, தென்னிந்திய மக்களை ஆட்கொண்டுள்ள அச்சத்தைப் போக்கிட வேண்டும்” எனப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வலியுறுத்தியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.