வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஒட்டாவா: ‛‛ கனடாவில் பேச்சு சுதந்திரம் என்ற பெயரில், ஹிந்துக்களை குறி வைத்து வெறுப்பு குற்றங்கள் நடக்கிறது ” என அந்நாட்டு ஆளுங்கட்சி எம்.பி.,யான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சந்திரா ஆர்யா கூறியுள்ளார்.
கனடாவை ஆளும் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சியை சேர்ந்த சந்திரா ஆர்யா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த சில நாட்களுக்கு முன்பு காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களும், சீக்கியர்களுக்கான நீதி என்ற அமைப்பை சேர்ந்தவர்களும், கனடாவில் வசிக்கும் ஹிந்துக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மிரட்டல் விடுத்தனர்.
இது போன்ற தொடர் தாக்குதல்களால் கனடாவில் வசிக்கும் ஹிந்துக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது எனக்கு தெரியவந்துள்ளது. ஹிந்துக்கள் விழிப்புடன் அமைதியாக இருக்க வேண்டும். தங்களுக்கு எதிரான குற்றங்களை போலீசில் புகார் அளிக்க வேண்டும்.
காலிஸ்தான் இயக்கத்தினர், ஹிந்துக்களை தூண்டிவிட சதி செய்கின்றன. இதன் மூலம் ஹிந்துக்கள் சீக்கியர்கள் இடையே பிரிவை ஏற்படுத்த வேண்டும் எனவும் நினைக்கின்றன. கனடாவில் வசிக்கும் பெரும்பான்மையான சீக்கிய சகோதரர், சகோதரிகளுக்கு காலிஸ்தான் இயக்கத்தை பிடிக்கவில்லை. சில காரணத்திற்காக, அவர்கள் வெளிப்படையாக கண்டனம் தெரிவிக்கவில்லை.
அதே நேரத்தில் கனடாவில் வசிக்கும் ஹிந்துக்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர். ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் இடையே குடும்ப ரீதியிலான உறவு மற்றும் கலாசார உறவுகளை கொண்டிருந்தனர்.
கனடாவில் சட்டத்தின் ஆட்சி நிறுவப்படுவதை உறுதி செய்கிறோம். அதேநேரத்தில் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பயங்கரவாதத்தை முன்னிலைப்படுத்துவதுடன், ஒரு மதத்திற்கு எதிராக வெறுப்பு குற்றங்கள் எப்படி அனுமதிக்கப்படுகின்றன என்பது எனக்கு புரியவில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement