மகளிர் 33% இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது – முழு விவரம்

புதுடெல்லி: மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் நேற்று நிறைவேறியது.

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. கடந்த 1996-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் தேவகவுடா தலைமையிலான ஆட்சியின்போது மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. போதிய ஆதரவு கிடைக்காத நிலையில், இந்த மசோதா 1998-ல் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதும் போதிய ஆதரவு கிடைக்கவில்லை.

கடந்த 1999, 2002, 2003 ஆகிய ஆண்டுகளில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டும் நிறைவேறாமல் போனது. 2010-ம் ஆண்டில் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. ஆனால், மக்களவையில் நிறைவேறவில்லை.

இந்நிலையில், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. கூட்டத்தின் 2-வது நாள் நிகழ்வுகள், புதிய நாடாளுமன்றத்தில் நடந்தன.

அப்போது முதல் மசோதாவாக, மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. விவாதத்துக்கு பிறகு, உறுப்பினர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 454 உறுப்பினர்களும், எதிராக 2 உறுப்பினர்களும் வாக்களித்தனர். பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு அளித்த நிலையில், கடந்த 20-ம் தேதி (நேற்று முன்தினம்) இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.

அதைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் இந்த மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் நேற்று தாக்கல் செய்தார். அவர் பேசும்போது, ‘‘மகளிர் மேம்பாட்டுக்காக மத்திய அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சிதான் மகளிர் இடஒதுக்கீடு மசோதா. சிறு தொழில்களுக்கு கடன் வழங்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட முத்ரா திட்டத்தில் 68 சதவீத பயனாளிகள் பெண்கள். அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வீட்டு வசதி, எரிவாயு வசதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார்’’ என்றார்.

இதைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் மசோதா மீது விவாதம் நடைபெற்றது. இந்த மசோதாவுக்கு கட்சி வேறுபாடின்றி தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது.

மக்களவை, மாநிலங்களவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் தற்போது 15 சதவீதத்துக்கு குறைவாகவே உள்ளது. பல மாநிலங்களின் சட்டப்பேரவையில் பெண்களின் பங்கு 10 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. இந்நிலையில், பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.