“போலீஸ்கிட்ட போகாதே… போனாலும் பிரயோஜனம் இல்லை!” – செல்போன்களை திருடி பேரம் பேசிய திருடன்

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த திராசு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன். இவர் நேற்று முன் தினம் இரவு அவரும், அவரின் மகனும் தங்கள் செல்பொன்களுக்கு சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியிருக்கின்றனர். மறுநாள் (20.09.2023) எழுந்து பார்த்தபோது, இரண்டு செல்போன்களும் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மறந்து வேறு எங்கேயாவது வைத்துவிட்டோமா என்று வீடு முழுக்க தேடிப் பார்த்த அவர்கள், தன் வீட்டில் இரண்டு செல்போன்கள் திருடு போய்விட்டது என்று பண்ருட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார் வீரப்பன்.

புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணையை தொடங்கிய நேரத்தில், தங்களின் செல்போன்களுக்கு வேறு எண் மூலம் போன் செய்துகொண்டே இருந்தனர். காலையில் இருந்து இவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்த நிலையில், மாலையில் செல்போனை திருடியவர் போனை எடுத்தார். “இந்த போனுக்கு சொந்தக்காரர்தானே நீங்க..?” என்று செல்போனை திருடியவர் கேட்க, ஆம் என்கிறார் அதன் உரிமையாளர். தொடர்ந்து பேசிய செல்போன் திருடன், “காலையில் இருந்து நீங்க போன் பண்ணீங்க. கொஞ்சம் வேலையாக இருந்தேன்.

“உங்களுக்கு தேவை இந்த செல்போன்கள்தானே? ஒரே இடத்தில் நான்கு செல்போன்களையும் நான்தான் எடுத்தேன். உங்கள் யாருக்கும் தொல்லை கொடுக்காமல் எடுத்து வந்துவிட்டேன். நான் திருட்டுப் பையன்தான். சூழ்நிலை காரணமாக திருடனாகிவிட்டேன். என்ன செய்வது ? எனக்கு காசு தேவைப்படுகிறது. காசு கொடுக்கிறீர்களா செல்போன்களை ஒப்படைத்து விடுகிறேன் ?” என்று கேட்கிறார்.

அதற்கு “நான் பணம் கொடுத்துவிடுகிறேன். எவ்வளவு வேண்டும்” என்று கேட்கிறார் உரிமையாளர். அப்போது, “நான் போகும் இடத்தில் எது கிடைக்கிறதோ அதை எடுப்பேன். செல்போன் கிடைத்தால் செல்போன் எடுப்பேன். பணம் கிடைத்தால் பணம் எடுப்பேன். நேற்று செல்போன் மட்டும்தான் கிடைத்தது. வேறு எதுவும் கிடைக்கவில்லை. அதனால் அதை எடுத்து வந்து விட்டேங்க. எனக்கு காசு தேவை. இந்த நான்கு செல்போனும் உங்களுக்கு கிடைக்கலைன்னா நீங்க காசுபோட்டு புதுசாதான் வாங்கனும். அதுக்கு எவ்வளவு செலவாகும்னு நீயே யோசிச்சிப் பாரு. இந்த செல்போன் உனக்கு வேணும்னா எனக்கு காசு கொடுக்கனும் ஓ.கேவா? அதேபோல அவசரப்பட்டு போலீஸ்கிட்ட போய் மட்டும் கம்ப்ளெயிண்ட்  கொடுத்துடாதீங்க.

கொடுத்தாலும் பிரயோஜனம் இல்லை. ஏனென்றால் அவனே திருட்டுப் பையன். யாரு… போலீஸ்காரன் ஒன்னாம் நம்பர் திருட்டுப் பையன். நீங்கள் என்னை பிடித்து அடித்து அவனிடம் ஒப்படைத்தாலும், ஒரு பிரயோஜனமும் கிடையாது. ஏனென்றால் என்னிடம் எவ்வளவு இருக்கிறதோ அதை வாங்கிக் கொண்டு என்னை வெளியே அனுப்பிவிடுவான். புரியுதுங்களா? ஜெயிலுக்குப் போனால்கூட இரண்டு வருடங்களில் வெளியே வந்துவிடுவேன். உங்களை ஒன்னும் சொல்லவில்லை. எனக்கு காசு தேவை. அதை கொடுத்தீங்கன்ன இன்னைக்கே உங்கள் போனை கொடுத்துடறேன். அப்புறம் திராசு என்று ஒரு ஊர் இருக்கிறதே அங்கேயும் ஒரு வீட்டில் செல்போனை எடுத்துவிட்டேன். அவர்களிடம் பேசி பணத்தை எடுத்து வர சொன்னேன். ஆனால் அவர்கள் நிறைய ஆட்களைக் கூட்டிவந்தார்கள். அவர்களை என்னை மறைந்திருந்து பார்த்தார்கள். அதனால் அவர்களிடம் போனை கொடுக்கவில்லை. நான் என்ன ஊர் என்றெல்லாம் நீங்கள் கேட்காதீர்கள். திராசு கிராமத்துக்குப் போய் யார் வீட்டில் செல்போன் திருடுபோனது என்று கேட்டு, அவர்களை என்னிடம் பேச சொல்லுங்களேன்” என்கிறார் அந்த திருடன்.

அதற்கு அந்த உரிமையாளர் மறுக்க, “உங்களுக்கு செல்போன் வேண்டுமென்றால் இன்னைக்கே, இப்போதே ரூ.15,000 கொடுங்கள். விடிவதற்குள் செல்போன்களை உங்களிடம் ஒப்படைத்துவிடுகிறேன்.  விடிவதற்குள் பணத்தை ரெடி செய்துவிட்டு கூப்பிடுங்கள். விடிந்தால் உங்கள் போனை எடுக்க மாட்டேன். ஆள் வைத்து என்னை தேடும் முயற்சியில் நீங்கள் ஈடுபட்டாலும், அதனால் எந்த பிரயோஜனமும் கிடையாது. உன் நல்லதுக்காகத்தான் சொல்றேன். அதேபோல நான் சொல்வதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும். வரும்போது எனக்கு சாப்பாடு எடுத்துக்கிட்டு, இல்லைனா ஹோட்டலில் வாங்கிட்டு வரனும்” என்று முடிக்கிறார் அந்த திருடன்.

அதையடுத்து பணம் கொடுப்பது போல உரிமையாளருடன், அவரது நண்பர்களுடம் ரகசியமாக சென்றிருக்கிறார்கள். அதே பகுதியில் உள்ள கரும்புத் தோட்டத்தில் மறைந்திருந்த அந்த திருடனை பிடித்து புடைத்து எடுத்துவிட்டு, செல்போனை பறிமுதல் செய்து பண்ருட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். அதையடுத்து அந்த திருடனிடம் நடத்திய விசாரணையில், அவர் பெயர் அய்யனார் என்பதும், திண்டிவனம் ஆச்சிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைப்பெற்று வருகிறது.!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.