Ratham: "`மின்னலே' படத்துல `மேடி… மேடி…' பாட்டை எழுதுனது நான்தான்!" – இயக்குநர் சி.எஸ்.அமுதன்

`தமிழ்ப்படம் – 1, 2′ படங்களுக்குப் பிறகு தனது ஸ்பூப் பாணியில் இருந்து விலகி விஜய் ஆண்டனியை வைத்து `ரத்தம்’ படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் சி.எஸ்.அமுதன். இந்தப் படம் குறித்தும் அவரின் கரியர் குறித்தும் இயக்குநர் சி.எஸ்.அமுதனிடமே பேசினேன். 

உங்களுக்கும் வெங்கட் பிரபுவுக்கும் ட்விட்டரில் நடக்குற உரையாடல் ரொம்பவே ஜாலியாக இருக்கும். உங்களோட நட்பைப் பற்றிச் சொல்லுங்க?

‘ரத்தம்’ படத்தில் விஜய் ஆண்டனி

“ராஜாங்கிற ஒற்றைப்புள்ளியில்தான் நாங்க இணைந்தோம். என்னோட முதல் படமான ‘தமிழ்ப்பட’மும் அவரோட ‘கோவா’வும் ஒரே நாளில் ரிலீஸாச்சு. அப்போ யுவன் ஸ்டூடியோ பிரசாத் லேப்ல இருக்கும். வெங்கட் பிரபு அங்க வருவார். நானும் என்னோட பட வேலைக்காக பிரசாத்ல இருப்பேன். அப்போ நாங்க அறிமுகமானோம். அப்போவே அவர்கிட்ட, ‘உங்க படங்களோட பாணியும் என் படத்தோட பாணியும் கிட்டத்தட்ட ஒண்ணுதான். நம்ம படங்கள் ஒரே நேரத்தில் வர வேண்டாம்னு நினைக்கிறேன்’னு நான் சொன்னேன். அதுக்கப்பறம் அதையே நாங்க விளம்பரங்களுக்கும் யூஸ் பண்ணிக்கிட்டோம். இப்படி ஆரம்பமானதுதான் எங்க நட்பு. என்னோட இரண்டாவது படமான ‘ரெண்டாவது பட’த்திலும் வெங்கட் பிரபு நடிச்சிருக்கார். ‘தமிழ்ப்படம் – 2’ லேயும் வருவார். இப்போ ‘ரத்தம்’ படத்தோட டீசரிலும் வெங்கட், வெற்றிமாறன், பா.இரஞ்சித்னு எல்லாரும் வருவாங்க. அப்படி இப்போவரைக்கும் எங்க நட்பு ஜாலியா போயிட்டு இருக்கு.”

‘ரத்தம்’ டீசர்ல வெங்கட் பிரபு, வெற்றிமாறன், பா.இரஞ்சித்னு தமிழ் சினிமாவோட முக்கியமான இயக்குநர்களைப் பேச வைக்கணும்னு எப்படி தோணுச்சு?

“நீங்க நல்லா கவனிச்சு பார்த்தீங்கன்னா, டீசர்ல அவங்க பேசுற வசனங்கள் எல்லாமே அந்த இயக்குநர்களின் படங்கள் பேசுற விஷயங்களை மையமாக வெச்சுத்தான் இருக்கும். வெங்கட் பிரபு ‘நமக்குனு ஒரு குடும்பம்; நமக்குனு ஒரு வீடுனு ஜாலியா வாழ்ந்திட்டு போயிடலாம்’னு பேசியிருப்பார். வெற்றி மாறன் ‘ஒரு காமன் மேன் வன்முறைக்கு ஆளாக்கப்படும் போது என்ன ஆகுறான்’னு பேசியிருப்பார். இரஞ்சித் ‘அது சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துது’னு பேசியிருப்பார். இந்த மூணும் இவங்களோட ஃபிலிம் மேக்கிங் ஸ்டைலில் இருந்தனாலதான் அவங்களையே பேச வைக்கலாம்னு தோணுச்சு. இவங்க மூணு பேருமே எனக்கு நல்ல நண்பர்கள்தான். அதுனால நான் கேட்டதும் எனக்காக இதில் நடிச்சுக் கொடுத்தாங்க. அவங்களை ஷூட் பண்ணும் போதும் செம ஜாலியாக இருந்துச்சு. மறுபடியும் வெங்கட் பிரபுவுக்கு இரஞ்சித் உதவி இயக்குநராக மாறி வசனத்தை சொல்லிக் கொடுத்திட்டு இருந்தார். பார்க்கிறதுக்கே செம ஜாலியாக இருந்துச்சு!”

பாடலாசிரியர் சி.எஸ்.அமுதன் பற்றிச் சொல்லுங்க..?

“நான் ப்ளான் பண்ணியெல்லாம் பாடலாசிரியர் ஆகலை. எல்லாமே எதார்த்தமா நடந்துச்சு. என் குடும்பம் ஒரு இசை குடும்பம். அதுல மொத்தம் 81 பேர். அதுல 80 பேருக்கும் இசை தெரியும். எனக்கு மட்டும்தான் தெரியாது. நான் காலேஜ் படிச்சிட்டு இருந்த சமயத்தில் என்னோட சகோதரர்கள் சேர்ந்து ஒரு ஆல்பம் பண்ணுனாங்க. அதை ரெக்கார்ட் பண்றதுக்கு ஒரு ஸ்டூடியோ வேணும்னு என்கிட்ட கேட்டாங்க. என் அப்பாவும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அப்பாவும் நல்ல நண்பர்கள். அதுனால, என் அப்பா சொல்லி ஹாரிஸ் ஜெயராஜ் ஸ்டூடியோவுக்கு போய் அந்த ஆல்பத்தை ரெக்கார்ட் பண்ணிட்டு வந்தோம். அப்போ ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளர் ஆகலை.

ஒரு நாள் ஹாரிஸ் போன் பண்ணி, ‘நான் ஒரு படம் பண்ணிட்டு இருக்கேன். அதுல ராப் பாடணும். உங்க டீம்ல யாராச்சும் ராப் சிங்கர் இருக்காங்களா’னு கேட்டார். நானும் ஒரு பையன் இருக்கான்னு சொல்லி அவனை ஸ்டூடியோவுக்கு அழைச்சிட்டு போனேன். அப்போ அவர் ‘இந்த ராப் ட்யூனுக்கு இந்த வரிகள் செட்டாகலை. இதை சரி பண்ற ஆள் உங்களுக்குத் தெரியுமா’னு கேட்டார். நானே பண்ணித்தரேன்னு சொல்லி அதை பண்ணேன். அதுதான் ‘மின்னலே’ படத்தோட ‘மேடி… மேடி…’ தீம் சாங். அது ஒரு சின்ன வேலைதான். ஆனால், அதுக்காக கேசட்டில் என் பெயர் போடுவார்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. இப்படித்தான் நான் பாடலாசிரியராக ஆனேன்.

அதுக்கப்பறம் ‘தமிழ்ப் படம்’ பண்ணும் போது அதுவரைக்கும் தமிழ் சினிமா பாடல்களில் வந்த புரியாத வார்த்தைகளை எல்லாம் வச்சு ஒரு பாட்டு பண்ணணும்னு ஆசைப்பட்டேன். இந்த ஐடியாவைச் சொல்லும் போது யாருக்கும் புரியலை. அதுனால, நானே எழுதிட்டேன். அது ‘தமிழ்ப்படம் – 2’லேயும் தொடர்ந்துச்சு. இயக்குநர் கே.வி.ஆனந்த் எனக்கு நல்ல நண்பர். அவர் இயக்கிய ‘அனேகன்’ படத்துல ஒரு பாட்டு எழுதச் சொல்லிக் கேட்டார். அவருக்காக அதை எழுதிக் கொடுத்தேன். அவ்வளவுதான். மத்தப்படி, நான் பெரிய பாடலாசிரியர் இல்லை.”

நீங்க யார்கிட்டேயும் உதவி இயக்குநராக வேலை பார்க்காதனால படம் எடுக்கும் போது சிரமங்கள் இருந்துச்சா?

‘ரத்தம்’ படத்தில் விஜய் ஆண்டனி

“நான் படம் எடுப்பேன்னு நினைக்கவேயில்லை. ஏன்னா, நானும் என்னோட நண்பர் தயாரிப்பாளர் சசிகாந்தும் பேசிட்டு இருந்தப்போ ‘தமிழ்ப்படம்’ ஐடியாவைச் சொன்னேன். அப்போ அவர் தயாரிப்பாளர் ஆகலை. அந்த ஐடியா நல்லா இருக்குனு சொல்லி ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா கிட்ட சொல்லச் சொன்னார். அவரும் கதை கேட்டுட்டு இதைப் படமாகப் பண்ணலாம்னு சொன்னார். ஆனால், முதலில் இதை டிவியில் பண்ணலாம்னுதான் நான் சொன்னேன். நீரவ் ஷா சார் சொன்னதுக்கு அப்பறம்தான் படமாகப் பண்ணலாம்னு

தோணுச்சு. அதுக்கப்பறம் நானும் சசியும் தயாரிப்பாளர் துரை தயாநிதி கிட்ட கதை சொல்லப் போனோம். அவர் கதையைக் கேட்டுட்டு, ‘நல்லா இருக்கு. யார் டைரக்டர்’னு கேட்டார். உடனே நான்தான்னு சொன்னேன். சசிக்குப் பயங்கர ஷாக். வெளியில வந்ததும் என்னடா நீயே டைரக்ட் பண்ணப் போறேன்னு சொல்ற… உனக்கு அனுபவம் இல்லையேனு சொன்னான். இந்த ஐடியா படமா எடுக்க வேற ஒரு ஆளால முடியுமானு தெரியலை. அதான் நானே பண்ணிடலாம்னு இருக்கேன். பார்த்துக்கலாம்னு சொன்னேன். ‘தமிழ்ப்படம்’ல ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, கலை இயக்குநர் சந்தானம்னு அனுபவமுள்ள ஆள்கள் இருந்தனால சமாளிச்சிட்டேன். முதல் படம் பண்ணுனதுக்கு அப்பறம் அடுத்தடுத்து பண்ணும் போது சிரமமாக இல்லை.”

இயக்குநர் சி.எஸ்.அமுதனின் முழுமையான நேர்காணல் இந்த வார ஆனந்த விகடனில் வெளியாகியுள்ளது. அதைப் படிக்க கீழேயுள்ள இணைப்ப க்ளிக் செய்யவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.