உலகளாவிய அபிவிருத்தி முன்முயற்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி பங்கேற்பு

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78வது கூட்டத்தொடரையொட்டி, 2023 செப்டம்பர் 19ஆந் திகதி நியூயோர்க்கில் நடைபெற்ற உலகளாவிய அபிவிருத்தி முன்முயற்சி ஒத்துழைப்பு விளைவுகளின் உயர்மட்டக் கூட்டத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி பங்கேற்றார். ‘நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கான உலகளாவிய அபிவிருத்தி முன்முயற்சி: நடவடிக்கை மற்றும் முன்னேற்றம்’ என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்தக் கூட்டம் சீனாவின் துணை ஜனாதிபதி ஹான் ஜெங் தலைமையில் நடைபெற்றது.

உலக அபிவிருத்திக் கூட்டாண்மைகளுக்கு புத்துயிரளிப்பதன் மூலமும், வலுவான, பசுமையான மற்றும் ஆரோக்கியமான உலகளாவிய அபிவிருத்தியை ஊக்குவிப்பதன் மூலமும், நிலையான அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரலை அடைவதற்கான முயற்சிகளை நிறைவு செய்யும் வகையிலான சீனாவின் இந்த முயற்சியின் மூலம், கடந்த 2 ஆண்டுகளில் வழங்கப்பட்ட உறுதியான முடிவுகள் மற்றும் பலன்களை அமைச்சர் தனது அறிக்கையில் பாராட்டினார். இரண்டாவது பாதி ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்காக என்னென்ன புதிய உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என ஐ.நா. வின் உறுப்பு நாடுகள் யோசித்துக்கொண்டிருக்கும்போது, உலகளாவிய அபிவிருத்தி முன்முயற்சி 2030 நிகழ்ச்சி நிரலை செயற்படுத்துவதற்கு புதிய உத்வேகத்தை அளிக்கின்றது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி மேலும் தெரிவிக்கையில், உலகளாவிய அபிவிருத்தி முன்முயற்சியானது அபிவிருத்திக்கு முன்னுரிமை அளித்தல், மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை, அனைவருக்கும் நன்மைகளை வழங்கி, எந்தவொரு நாட்டையும் எந்த நபரையும் பின்னோக்கி விட்டுச் செல்லாதிருத்தில், புதுமை உந்துதல் அபிவிருத்தி, மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான நல்லிணக்கம் மற்றும் முடிவு சார்ந்த செயல்கள் போன்ற சில அடிப்படைக் கொள்கைகளுக்கு அடித்தளம் அமைத்துள்ளதாகத் தெரிவித்தார். உலகளாவிய அபிவிருத்தி முன்முயற்சியின் கீழ் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பில் இலங்கைக்கு வழங்கப்பட்ட தொடர்ச்சியான உதவிகளையும் அவர் பாராட்டினார்.

உலகளாவிய அபிவிருத்தி முன்முயற்சியை 2021 இல் ஐ.நா. பொதுச் சபையின் போது ஜனாதிபதி ஜி ஜின்பிங் முன்மொழிந்தார். இது அபிவிருத்திக்கான உலகளாவிய சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், அபிவிருத்தி மற்றும் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அதே வேளை, நிலையான அபிவிருத்திக்கான ஐ.நா.வின் 2030 நிகழ்ச்சி நிரலை விரைவாக செயற்படுத்த முயற்சிக்கின்றது. கடந்த 2 வருடங்களில் ஐக்கிய நாடுகள் சபை உட்பட 100 க்கும் மேற்பட்ட நாடுகளும் சர்வதேச அமைப்புக்களும் உலகளாவிய அபிவிருத்தி முன்முயற்சிக்கு ஆதரவளித்துள்ளதுடன், இலங்கை உட்பட 60 க்கும் மேற்பட்ட நாடுகள் உலகளாவிய அபிவிருத்தி முன்முயற்சியின் நண்பர்கள் குழுவில் இணைந்துள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.