இனிப்பில்லாத சுவையான பாயாசம் – இல்லத்தரசியின் இனிய போராட்டம் 6 | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

நீரிழிவுக்கு உகந்த சமையலைத் தேடிக் கற்றுச் சமாளித்த விதங்கள் பற்றி மேலும் சொல்வதற்கு முன் ஞாயிற்றுக் கிழமை விடுமுறைச் சமையல் பற்றிச் சொல்லி விடுகிறேன். வாரக் கடைசி என்றாலே ஏதேனும் ஸ்பெஷல் உணவு, ஓய்வு, பொழுது போக்கு இவை தானே வரும் புதிய வார ஓட்டத்துக்கு நம்மைத் தயார் படுத்தும்….

வாரம் தோறும் வடை மற்றும் அவருக்கான பாயாசத்துடன் உணவு என்றால் ஆச்சரியப் படுவீர்கள் தானே..

எண்ணெய் அதிகம் குடிக்காமல் கொஞ்சம் அரிசி சேர்த்துச் செய்த உளுந்து வடை அல்லது கடலைப் பருப்புடன் துவரம்பருப்பு ( துவரம்பருப்பு எண்ணெய் கோர்க்காது என்பதால்) மற்றும் கண்டிப்பாக கொள்ளு சேர்த்த ஆமவடை ( வெங்காயம் சேர்த்தால் மசால் வடை) அன்று செய்து விடுவது வழக்கம். அப்படி இல்லையேல் பருப்பு உசிலி. அன்று ஒருநாள் காய்கறி சேர்க்காமல் சுண்டை மணத்தக்காளி போன்ற வற்றல் சேர்த்த புளிக் குழம்பு .. வறுக்கும் போது ஓரிரு நாட்களுக்கு உணவுக்குத் தொடு துணையாக இருப்பது போல் கொஞ்சம் கூட வறுத்தும் வைத்துவிடுவோம்.

Representational Image

வடை அல்லது உசிலி செய்யவில்லை எனில் கொத்துக்கடலை சேர்த்த புளிக் குழம்பு.. சாப்பிடுவதற்கு சற்று முன் சிறிது சீரகம், மல்லி விதைகள் , கடலைப் பருப்பு, பச்சை மிளகாயை ஒரு தக்காளியும் சேர்த்து வதக்கி அரைத்து ஏடு நீக்கிக் கடைந்த தயிரில் கலந்து தாளித்து லேசாகப் பொங்க விட்ட மோர்க் குழம்பு..

அன்று குழந்தைகளுக்கு உருளை வதக்கல் உண்டு (டேஸ்ட் பார்க்க அவருக்கும்) என்பதால் எங்களுக்கு வற்றல் குழம்பிலேயே சில உருளைத் துண்டுகளை வெட்டிச் சேர்த்து விடுவேன். வெந்த கிழங்கில் ரெண்டு துண்டுகளை தக்காளித் தயிர்ப் பச்சடியில் கலந்து விடுவேன்.

(பலவித காய்கறிகள் சேர்த்துச் செய்யும் வழக்கமான சாம்பாரிலும் எப்போதாவது ஓரிரு துண்டுகள் சேர்த்து விடுவது வழக்கம்.) சின்ன வயதுக் குழந்தைகளுக்கு சில விரும்பும் உணவு வகைகளைத் தவிர்க்க வைப்பது எத்தனை கஷ்டமோ அது போல பெரியவர்களாக இருந்தாலும் உணவு விஷயத்தில் இது உனக்கு இனிமேல் கிடையாது என்று மறுப்பது சமைத்துப் போடுபவர்களுக்குக் கஷ்டமான ஒன்று தான்.

Representational Image

ஆரோக்கியமான உணவு முறைகள் தானே என்று அன்புடன் கூட இருப்பவர்களும் கொஞ்சம் உணர்ந்து பகிர்ந்து கொண்டால் எளிதில் பழகிக் கொள்வார்கள். பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் காய்ச்சல் கண்டால் இட்லி ரசம் சாதம் என்று வீட்டுச் சமையலையே முடித்து விடுவார்கள். அது போலத் தான் இதுவும். முதன் முதல் சென்னையில் ஒரு பெரிய மருத்துவ மனையில் அவருக்குப் பரிசோதனை செய்து வந்தது பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.

நாங்கள் திரும்பி வருவதற்காக வெளியில் வருகையில் எங்களுக்கு உணவு ஆலோசனைகள் பற்றி ஒரு வகுப்பு போல் எடுத்து விளக்கம் அளித்த இளம் பெண் மருத்துவர் மரத்தடியில் நின்று கொண்டிருந்தார். சஞ்சலத்துடன் இருந்த நான் அவர் அருகில் சென்று” போய் வருகிறோம் டாக்டர்.. பயம் ஒன்றும் இல்லையே? ” என்று தயங்கிக் கேட்க அவர் என் விரல்களை ஆதரவாகப் பற்றி புன்னகையுடன்” பயப்படாமல் சென்று வாருங்கள்..

என் கணவருக்கு இதே மாதிரியான உடல் நிலை என்பதால் அவர் திட்டமிட்ட உணவு முறைகளைப் பின்பற்றி உடற்பயிற்சி ஜாகிங் என்று என்னை விட இளமையாகத் தெரிகிறார்.. எனக்கே பொறாமையாக இருக்கிறது பார்த்தால்” என்று சிரிப்புடன் கூறி வழியனுப்பி வைத்தார். இன்றும் அவரின் ஊக்கமான வார்த்தைகளுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

உளுந்து வடை

சரி… இப்ப நம்ம வடைக்கு வருவோம். உளுந்து வடையில் எண்ணெய் கோர்த்துவிடும்  சமயங்களில் சிட்டிகை உப்பு சேர்த்துக் கொதிக்கும் வெந்நீரில்  அமிழ்த்தி எடுத்தால் அதிகப்படி எண்ணெய் பிரிந்து விடும். அதை அப்படியே கொத்துமல்லி மிளகாய் சேர்த்துத் தாளித்த கடைந்த தயிரில் போட்டு விட்டால் தயிர் வடை..

அதுபோல் ஆமவடையை சிறிது கொதிக்கும் ரசத்தைத் தனியாக எடுத்து அதில் அமிழ்த்தி விட்டு எடுத்தால் ரசவடை… இன்னும் இட்லி மாவில் சிறிது கறிவேப்பிலை கொத்துமல்லி பச்சை மிளகாய் பெருங்காயம் சேர்த்து  எண்ணெய் தடவிய குழி அப்பக்காரையில் ஊற்றி கொஞ்சம் சிவக்க  எடுத்து அதையும் அமர்க்களமாக தயிர் வடை செய்து தருவதும் உண்டு… எண்ணெயும் கோர்க்காது. தயிரில் உடனே ஊறிப் பஞ்சு போல் ருசிக்கும். ஒருமுறை முயற்சித்துப்  பாருங்கள்… நாளடைவில் அதுவும் பழகிக் கூடப் போய்விட்டது..

அப்புறம் அந்தப் பாயசம் மாதிரியான பாயசம்….

ஞாயிற்றுக் கிழமை என்றில்லை. எல்லா விசேஷ நாட்களிலும் அவருக்கு நான் இன்று வரை தரும் பாயாசம் இதுதான். சேமியா அல்லது பருப்பு வகைப் பாயாசம் எதுவாக இருந்தாலும் வெல்லம் அல்லது சர்க்கரை சேர்க்குமுன் தனியே ஒரு கரண்டி எடுத்து ரெண்டு பாதாம் பருப்புகள் ரெண்டு முந்திரி ஒரு சின்னச் சிட்டிகை ஜாதிக்காய் பொடி ஏலப் பொடி என அரைத்துச் சேர்த்த ஏடு நீக்கிய நன்கு வாசனையூட்டிய பாலில் கலந்து சூடாகக் கொடுத்து விடுவது வழக்கம். பாதாம் பருப்புக்கு பதில் பருகுமுன் சிறிது பொட்டுக்கடலைப் பொடி சேர்த்து உடன் சூடாக ஆற்றிக் கொடுத்தாலும் சுவையே.

Representational Image

சர்க்கரை சேர்க்காமல் காஃபி குடிப்பவர்கள் மறதியாக சர்க்கரை சேர்த்துக் கொடுத்துவிட்டால் பிடிக்கவில்லை என்பார்கள். அது போல அவருக்கு இந்த வாசனையும் ருசியும் நன்றாகவே பழகிப் போனது. படிப்படியாக பாயாசம் செய்வதே இப்படித்தான் என்று எனக்கு ஆகி விட்டது. அதில் ஒரு துண்டு வெல்லம் சேர்த்து நெய்வேத்யம் செய்வோம். வீட்டுக்கு வருபவர்களுக்கு விருப்பம் போல் இனிப்பு சேர்ப்போம்.

வேறு என்ன செய்வது…

ஆக…. வடை பாயசம் மோர்க்குழம்பு தயிர்ப் பச்சடி புளிக்குழம்பு இவற்றுடன் எந்நாளும் உள்ள கீரை என்று உடல் நிலைக்குத் தகுந்த ஸ்பெஷல் உணவு தான் அன்று.

மாலையில் மாறுதலுக்கு எப்போதாவது வெளியில் உண்ணச் சென்றால் இரண்டு பூரிகள் உள்ள செட் ஒன்று வாங்கி ஆளுக்கு ஒன்றும் அவருக்குப் பிடித்த ரவா தோசையும் எனக்குப் பிடித்த ஆப்பமும் தான் அந்த நாளில் எங்கள் மெனு…..

இன்னும் நிறைய இருக்கிறதே…

அவற்றையும் பார்ப்போம்…

மீனாக்ஷி மோஹன்

ஹைதராபாத்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.