பலரும் தங்களது பொருளாதாரப் பிரச்னைகளை சரி செய்யத்தான் வேலை செய்கிறார்கள். அவர்களின் பேஷன் என்பது வேறாக இருக்கிறது.
ஆனால், தனது வேலையையும் பேஷனையும் பேலன்ஸ் செய்யும் பெண் ஒருவரின் வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் வசித்து வரும் துருவி பஞ்சால் என்ற பெண், ஹெல்த்கேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மருந்துகள் குறித்து இளங்கலை படிப்பை முடித்திருந்தாலும், சமையல் மீது தனக்கு இருக்கும் ஆசையால் `ஃபுட் ஸ்டால்’ நடத்தி வருகிறார்.
இவர் பாஸ்தா போன்ற ஸ்ட்ரீட் ஃபுட்களை சமைக்கும் வீடியோ காட்சிகளை, இன்ஸ்டா பக்கத்தில் யோகேஷ் ஜிவ்ரணி என்பவர் பதிவிட்டு இருக்கிறார்.
அதில், “பஞ்சாலின் தெருவில் அமைக்கப்பட்டுள்ள `ஃபுட் ஸ்டால்’ வார இறுதி நாள்களில் 6.30 மணி முதல், இரவு 11 மணிவரை செயல்படுகிறது. கடையைத் திறந்த சிலமணி நேரங்களிலேயே வாடிக்கையாளர்கள் வந்து லைனில் நின்று ஆர்டர்களை தருகின்றனர்.
ஆர்டர் கிடைத்தவுடன் பஞ்சால் சமைக்கத் தொடங்குகிறார். Zydus போன்ற பெரிய மருந்தக நிறுவனத்தில் வேலை செய்தாலும் தன்னுடைய பேஷனை தொடரவேண்டும் என்று பஞ்சால் நினைத்தார்.
தன்னுடைய மகள் சமையல் மீது கொண்டிருக்கும் ஆசையை அறிந்த பஞ்சாலின் பெற்றோர்கள் ஃபுட் ஸ்டால் நடத்த மகிழ்ச்சியோடு சம்மதித்துள்ளனர்.
இவர், இளைஞர்கள் அதிகம் கூடும் பகுதியில் சிறிய ஃபுட் பிசினஸ் செய்ய வேண்டும் என்று நினைத்தார். இளைஞர்கள் பெரும்பாலும் விரும்பப்படக்கூடிய பாஸ்தா மற்றும் மக்ரோனியை தனது மெனுவில் சேர்த்துள்ளார். சமைப்பதும் மக்களுக்குப் பரிமாறுவதும் தனக்கு மனநிறைவைத் தருவதாக பஞ்சால் கூறுகிறார்’’ என்று பதிவிட்டுள்ளார். பலரும் இவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து கமென்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.