IND vs AUS: ஷமியின் மிரட்டலும், ஷர்துலின் சொதப்பலும் – இந்தியாவின் பந்துவீச்சு எப்படி இருந்தது?

India vs Australia, 1st ODI: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் தொடரின் முதல் போட்டி பஞ்சாப் மாநிலம் மொஹாலி ஐ.எஸ். பிந்த்ரா மைதானத்தில் இன்று தொடங்கியது. உலகக் கோப்பை தொடருக்கு முன் இந்த ஒருநாள் தொடர் நடைபெற இருப்பதால் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.

பிளேயிங் லெவன்

இருப்பினும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளுக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் போன்றோருக்கு ஓய்வளிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு முக்கிய வீரர்களாவர். மேலும், ராஜ்கோட்டில் நடைபெறும் மூன்றாவது போட்டியில் மேற்கூறிய நால்வரும் அணியுடன் இணைவர். 

அந்த வகையில், இன்றைய முதல் ஒருநாள் போட்டியின் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய சிராஜ் இன்று பெஞ்சில் அமரவைக்கப்பட்டார். அவருக்கு பதில் ஷமி, ஷர்துல் தாக்கூர் வேகப்பந்துவீச்சு தாக்குதலுக்கு பும்ராவுடன் களமிறக்கிவிடப்பட்டனர். 

தொடக்கத்திலும் முடிவிலும் ஷமி தான்…

மேலும், அக்சர் படேலின் காயம் காரணமாக அணிக்குள் வந்துள்ள அஸ்வின் இந்த போட்டியில் விளையாடினார். சுமார் 6 ஆண்டுகளுக்கு பின் சுழல் கூட்டணியான அஸ்வின் – ஜடேஜா ஆகியோர் இணைந்து ஒருநாள் போட்டிகளில் இன்று விளையாடினர். மிடில் ஆர்டரை பொறுத்தவரை ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல், இஷான் கிஷன் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். ஓப்பனர்களாக சுப்மான் கில்லுடன், ருதுராஜ் களமிறக்கப்பட்டார்.

இந்திய அணியின் பந்துவீச்சை பார்த்தோமானால் தொடக்க ஓவர்களிலும், கடைசி கட்ட ஓவர்களிலும் ஓரளவு நன்றாக வீசியிருந்தாலும் மிடில் ஓவர்களில் அதிக ரன்களை கசியவிட்டது என்பதை மறுக்க முடியாது. ஷமி புது பந்தில் மார்ஷின் விக்கெட்டை எடுத்தாலும், வார்னர் – ஸ்மித் ஜோடி சற்று நிலைத்து நின்று விளையாடியது. வார்னர் 52 ரன்களை அடித்து ஜடேஜாவிடம் வீழ்ந்த நிலையில், ஸ்மித் 41 ரன்களில் ஷமியிடம் போல்டானார்.

ஆஸ்திரேலியாவின் வலுவான பார்ட்னர்ஷிப்கள்

ஆஸ்திரேலியா மிடில் ஆர்டர் பேட்டர்கள் வலுவான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். வார்னர் – ஸ்மித் ஜோடி 94 ரன்களுக்கும், லபுஷேன் – கிரீன் ஜோடி 45 ரன்களுக்கும், ஸ்டாய்னிஸ் – இங்லீஸ் ஜோடி 62 ரன்களுக்கும் பார்ட்னர்ஷிப் அமைத்தது. கடைசி கட்ட ஓவர்களில் ஸ்டாய்னிஸ், ஷார்ட், ஷென் அப்பார்ட் ஆகியோரின் விக்கெட்டை ஷமி எடுத்தாலும், கேப்டன் கம்மின்ஸ் கடைசியில் ஆறுதலான ரன்களையும் சேர்த்தார். அவர் 9 பந்துகளில் 21 ரன்களை எடுத்தார். கடைசி பந்தில், ஸாம்பா ரன் அவுட்டாக ஆஸ்திரேலிய அணி 276 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.

வார்னர் 52, ஸ்மித் 41, இங்லிஸ் 45, லபுஷேன் 39, கிரீன் 31, ஸ்டாய்னிஸ் 29 ரன்களை அதிகபட்சமாக எடுத்திருந்தனர். ஷமி 5, பும்ரா, அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். 5 பந்துவீச்சாளர்கள் மட்டும் வீசிய நிலையில், ஷர்துல் தாக்கூர் 10 ஓவர்கள் வீசி 78 ரன்களை கொடுத்தார், அவர் விக்கெட்டும் கைப்பற்றவில்லை.

அஸ்வின் எப்படி வீசினார்?

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஸ்வின் 10 ஓவர்கள் வீசி 1 விக்கெட்டை (லபுஷேன் – ஸ்டம்பிங்) கைப்பற்றி 47 ரன்களை கொடுத்தார். நல்ல எகானிமியில் வீசியிருந்தார், இதில் பெரிதாக சுழலுக்கு கைக்கொடுக்கவில்லை என்றாலும் கட்டுக்கோப்பாக வீசியிருந்தார். ஆனால், இந்திய அணியின் மிடில் – ஓவர் ரன் கசிவை தடுக்க வலுவான திட்டமிடல் வேண்டியதாகியுள்ளது. 

குறிப்பாக, 11 – 40 ஓவர்கள் வரை 30 யார்டு வட்டத்திற்கு வெளியே நான்கு பீல்டர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதால் அஸ்வின் அவருக்கான ரிதத்தை மீட்டெடுத்து கொள்ள வேண்டிய தருணத்தில் உள்ளார். அடுத்த இரண்டு போட்டிகளில் அவர் செயல்படும் விதமும், அக்சர் படேலின் உடற்தகுதியும் தான் அஸ்வின் உலகக் கோப்பைக்கு வருவாரா, வர மாட்டாரா என்பதை உறுதி செய்யும். தற்போது அவர் பேட்டிங்கிலும் சிறப்பான பங்களித்தால் இந்தியாவுக்கு கூடுதல் பலனாகும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.