புதுடில்லி : சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பான வழக்கில், தமிழக அமைச்சர் உதயநிதிக்கு உச்ச நீதிமன்றம் ‘நோட்டீஸ்’ அனுப்பி உள்ளது. மேலும், இது தொடர்பாக ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் தமிழக அரசு பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. உதயநிதி மீது, எப்.ஐ.ஆர்., எனப்படும், முதல் தகவலறிக்கை பதிவு செய்யக் கோரிய வழக்கில், இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் மகனும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி, சென்னையில் சமீபத்தில் நடந்த, தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் பேசியதாவது:
சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும்; எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது; ஒழிக்க வேண்டும். அப்படித் தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசியிருந்தார்.
கண்டனம்
உதயநிதியின் இந்த பேச்சு, நாடு முழுதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு ஹிந்து அமைப்புகள், பா.ஜ., தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், உதயநிதிக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே, ‘சனாதன தர்மத்தை இழிவுபடுத்திய அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்’ என, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெகன்னாத், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
மனுவை ஏற்கிறோம்
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தாமா சேஷாத்திரி நாயுடு வாதிடுகையில், ”சனாதன தர்மம் நல்லதல்ல என்றும், அதிலிருந்து விலகி இருக்கும்படியும், மாணவர்களிடம் உதயநிதி கேட்டுக் கொண்டது ஏற்கத்தக்கதல்ல.
”ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் நம்பிக்கைக்கு எதிராக தனி நபர் ஒருவர் பேசினால் பெரிதுபடுத்த முடியாது. ஆனால், குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக, அமைச்சர் பொறுப்பில் உள்ள ஒருவர் பேசுவதை எளிதாக கடந்து செல்ல முடியாது,” என்றார்.
அப்போது அவரிடம், ‘இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தை ஏன் முதலில் அணுகவில்லை. எப்.ஐ.ஆர்., பதிவு செய்யும்படி கூறுவதன் வாயிலாக உச்ச நீதிமன்றத்தை போலீஸ் ஸ்டேஷனாக மாற்றுகிறீர்களா?’ என, நீதிபதிகள் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த தாமா சேஷாத்திரி நாயுடு கூறியதாவது:
தனிநபர் ஒருவர் குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக பேசியது தொடர்பான வழக்கை, ஏற்கனவே இந்த நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில், அமைச்சராகஇருப்பவர் சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளதால், உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேலும், எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய யாரும் முன்வரவில்லை. எதிர் காலத்தில் உதயநிதி இது போன்ற கருத்துக்களை தெரிவிக்காமல் இருக்கவும், அவர் மீது வழக்குப் பதிவு செய்யும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
இதன் பின் நீதிபதிகள் கூறியதாவது:
இந்த விவகாரத்தில், உயர் நீதிமன்றத்தை மனுதாரர் முதலில் அணுகியிருக்க வேண்டும். இருந்தாலும், உதயநிதி பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புகிறோம். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கிறோம்.
மேலும், சர்ச்சை பேச்சில் தொடர்புடைய தி.மு.க., – எம்.பி., ஆ.ராஜா, வி.சி.க., – எம்.பி., திருமாவளவன், மார்க்சிஸ்ட் எம்.பி., வெங்கடேசன், மாநில ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் தமிழக அரசு, மாநில டி.ஜி.பி., உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சகமும் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்