புதுடெல்லி: இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பா வர்த்தக வழித்தடம் உலக வர்த்தத்தின் அடித்தளமாக அமையும் என்று மனதில் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று அகில இந்திய வானொலியில் மனதின் குரல் எனும் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார் கடந்த 2014ம் ஆண்டு அக்டோலர் 3ம் தேதி தொடங்கிய மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி தொடர்ந்து மாதம்தோறும் ஒலிபரப்பாகி வருகிறது. அதன் 105வது நிகழ்ச்சி இன்று (செப்.24) ஒலிபரப்பாகியது.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “சந்திரயான் -3 நேரலையை 80 லட்சத்துக்கும் மேலானோர் கண்டு ரசித்துள்ளனர். சந்திரயான் -3 வெற்றிக்குப் பின்னர் ஒவ்வொரு இந்தியருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கொடுத்த நிகழ்வாக ஜி-20 உச்சி மாநாட்டு வெற்றி திகழ்கிறது. ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்துக்கு உலகத் தலைவர்கள் வந்து அஞ்சலி செலுத்தியது மிகப்பெரிய தருணம். காந்தியின் கொள்கைகள் இன்றளவும் பொருத்தமாக உள்ளன என்பதற்கு இது ஒரு சாட்சி.
வரவிருக்கும் அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி அன்று நிறைய சுகாதாரத் திட்டங்கள் நாடு முழுவதும் ஒருங்கிணைக்கப்பட உள்ளன. அதேபோல் வரும் செப்.27 ஆம் தேதி சர்வதேச சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாட்டு மக்கள் இந்தியாவின் பன்முகத்தன்மையை அறியும்படி சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். சமீபகாலமாக இந்தியா உலக சுற்றுலா தலங்களில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”என்றார்
தொடர்ந்து பேசிய பிரதமர், இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பா வர்த்தக வழித்தடம் உலக வர்த்தத்தின் அடித்தளமாக அமையும். அதற்கான முன்முயற்சி இந்திய மண்ணில் எடுக்கப்பட்டது என்பது உலக வரலாற்றில் இடன்பெறும்” என்றார்.
இந்தியா பழங்காலத்தில் பயன்படுத்திய “பட்டுப்பாதை” என்ற வர்த்தக வழித்தடத்தை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, சமீபத்திய ஜி-20 உச்சி மாநாட்டில் இந்தியா – மத்திய கிழக்கு -ஐரோப்பிய ஒன்றிய பொருளாதார வழித்தடத்தை பரிந்துரைத்ததாக கூறினார்.
வரவிருக்கும் பண்டிகை காலத்துக்கான வாழ்த்துகளை நாட்டு மக்களுக்கு உரித்தாக்கிய பிரதமர் நரேந்திர மோடி, “விழாக் காலத்தில் உங்கள் வீட்டுக்கு புதிதாக என்ன பொருள் வாங்க நினைத்தாலும் அது இந்தியத் தயாரிப்பாக இருக்கட்டும்” என்று வலியுறுத்தினார்.