ஆப்பிள் vs சாம்சங்: இந்தியாவில் இருந்து அதிகம் ஏற்றுமதியாகும் மொபைல் இதுதான்

உலகளவில் தொழில்துறையின் முகமாக இந்தியா மாறிக் கொண்டு வருகிறது. உலகின் பல முன்னணி நிறுவனங்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தங்களின் தொழிற்சாலைகளை நிறுவியுள்ளன. குறிப்பாக ஆட்டோமொபைல் மற்றும் ஸ்மார்ட்போன் உற்பத்தியில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இப்போது ஸ்மார்ட்போன் உற்பத்தியில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் ஆப்பிள் நிறுவனம் சாம்சங்கை பின்னுக்கு தள்ளி முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. அண்மையில் வெளியான தகவலின்படி, ஜூன் காலாண்டில் மட்டும் நாட்டின் மொத்த 12 மில்லியன் ஏற்றுமதிகளில் 49% ஆப்பிள் நிறுவனத்தினுடையது. அதற்கு அடுத்த இடத்தில் ஆப்பிள் நிறுவனத்துக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் கொரிய நிறுவனமான சாம்சங்க் இருக்கிறது. அது 45 விழுக்காடு ஏற்றுமதியைக் கொண்டிருக்கிறது. 

கடந்த ஆண்டு, அதாவது 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் அனுப்பப்பட்ட சுமார் 8 மில்லியன் ஸ்மார்ட்போன்களில் வெறும் 9% மட்டும் ஆப்பிள் மொபைல்களின் ஏற்றுமதியாகும். இது Q2 2023-ல் மொத்த ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் 5 மடங்காக உயர்ந்துள்ளது என்று தொழில்துறையினர் தெரிவித்தனர். 2023 மார்ச் காலாண்டில் இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி சுமார் 13 மில்லியனாக இருந்தது, அதேநேரத்தில் ஜூன் காலாண்டில் 12 மில்லியனாக குறைந்துள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள்

ஆப்பிள் நிறுவனம் 2017 ஆம் ஆண்டு ஐபோன் எஸ்இ மூலம் இந்தியாவில் ஐபோன்களை உற்பத்தி செய்யத் தொடங்கியது. 2017 ஆம் ஆண்டில் இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்கியதில் இருந்து நிறுவனம் படிப்படியாக தங்களின் உற்பத்தியை விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறது. ஆப்பிள் நிறுவனத்தின் மூன்று ஒப்பந்த உற்பத்தியாளர்களான ஃபாக்ஸ்கான், விஸ்ட்ரான் மற்றும் பெகாட்ரான் – 2022 இன் இரண்டாம் பாதியில் இருந்து ஐபோன் 14 மற்றும் அதற்கு முந்தைய தயாரிப்பின் மூலம் உற்பத்தியை அதிகரித்ததன. வளர்ந்து வரும் இந்திய சந்தை மற்றும் ஏற்றுமதிக்கு ஏற்ற மாதிரிகள் ஆப்பிள் நிறுவனத்துக்கு உகந்ததாக இருக்கின்றன. இந்த ஆண்டு முதல், ஆப்பிளின் சமீபத்திய ஐபோன்களில் மேட்-இன்-இந்திய மாடல்களான ஐபோன் 15, இந்தியாவில் விற்பனையை தொடங்கியிருக்கின்றன. 

ஆப்பிள் ஒரிஜினல் உபகரணங்களை உற்பத்தி செய்யும் ஃபாக்ஸ்கான், தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள நிறுவனத்தின் ஆலையில் அவற்றைத் தயாரிப்பதாகக் கூறப்படுகிறது. புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில், சீனாவை நம்பியிருப்பதை பன்முகப்படுத்தும் முயற்சியில், உலகளவில் நிறுவனத்தின் அதிக விற்பனையான தயாரிப்பான ஐபோன்களுக்கான ஏற்றுமதி மையமாக இந்தியாவை மாற்றுவதற்கான ஆப்பிளின் விருப்பத்தை இது உறுதிப்படுத்துகிறது என்று நிபுணர்கள் தெரிவித்தனர். டாடா குழுமமும் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் ஐபோன்களை உற்பத்தி செய்யத் தொடங்கும். டாடா நிறுவனம் இந்தியாவில் விஸ்ட்ரான் ஆலையை வாங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.