தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியிலும், இறக்கும் முன் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்குகளுக்கு அரசு மரியாதை அளிக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியாவில் உறுப்பு தானம் செய்வது அதிகரித்துள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில் தான் உறுப்பு தானம் திட்டம் முன்னோடியாக செயல்படுத்தப்படுகிறது. இறக்கும் முன் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியிலும் உறுப்பு தானம் செய்ய விருப்பம் தெரிவித்து பல குடும்பங்கள் பதிவு செய்து வருகின்றன.
மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலில், அவர்களின் உடல் உறுப்புகளை தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களை போற்றிடும் வகையில், தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியிலும், இறக்கும் முன் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகளுக்கு இனி அரசு மரியாதை அளிக்க வேண்டும், இதற்கான அறிவிப்பை முதல்வர் ரங்கசாமி வெளியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் மூலம் புதுச்சேரியில் உறுப்பு தானம் செய்வது அதிகரிக்கும்.
தற்போது உயிருடன் இருக்கும் ஒருவர், அரசின் விதிகளுக்கு உட்பட்டு தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதாவது அப்பா, அம்மா, சகோதரர், சகோதரி, மகன், மகள், கணவன், மனைவி ஆகிய 8 உறவுகளுக்கு மட்டும் 2 சிறுநீரகங்களில் ஒன்று, கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக வழங்க முடியும்.
அதேபோல, மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து கண், இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கணையம், எலும்பு, தோல் உள்ளிட்ட உறுப்புகளை தானமாக பெறலாம். இதன்மூலம் அதிகபட்சமாக 12 பேருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement