ரஜினி – பி.வாசுவின் கூட்டணியில் உருவாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ‘சந்திரமுகி’.
இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துகொண்டிருந்த நிலையில் மீண்டும் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் ‘சந்திரமுகி 2’ உருவானது. இப்படத்தில் ராதிகா, கங்கனா ரணாவத், வடிவேலு, லட்சுமிமேனன், ரவிமரியா, மகிமா நம்பியார் என பலர் நடித்திருக்கின்றனர். கீரவாணி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
இந்த படம் கடந்த 15-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாள்களை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருந்தநிலையில் திடீரென்று படத்தின் ரிலீஸ் தேதியை செப்டம்பர் 28 ஆம் தேதிக்கு படக்குழுவினர் மாற்றி விட்டனர். இந்நிலையில் படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகாததற்கான காரணத்தை இயக்குநர் பி.வாசு கூறியிருக்கிறார்.
படத்திற்கான புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் ஐதராபாத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது ரிலீஸ் தேதி மாற்றிவைக்கபட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த பி.வாசு, “ செப்டம்பர் 15- ந் தேதி படம் ரிலீஸாகப் போகிறது என்றால் 8-ஆம் தேதி இரவு எனக்கு போன் கால் வருகிறது.
படத்தில் உள்ள 480 ஷாட்ஸ் (shots) காணாமல் போய்விட்டது என்று. படம் ரிலீஸாகும் ஒரு வாரத்திற்கு முன்பு இதுபோன்ற ஒரு செய்தி வருகிறது. எனக்கு ஒரே அதிர்ச்சி. பிறகு நான்கு, ஐந்து நாட்களுக்குப் பிறகு அந்தக் காட்சிகள் எல்லாம் மீட்டெடுக்கப்பட்டது” என்று கூறியிருக்கிறார். பி.வாசு பேசியவை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.