விருதுநகர்: விருதுநகரில் இன்று நடந்த வந்தே பாரத் ரயில் வரவேற்பு நிகழ்ச்சி பாஜக விழாபோல் நடைபெற்றது.
நாடு முழுவதும் 9 இடங்களில் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வந்தார். தமிழகத்தில் திருநெல்வேலி- சென்னை இடையேயான வந்தே பாரத் ரயிலையும் பிரதமர் மோடி இயக்கி வைத்தார். திருநெல்வேலியில் புறப்பட்டு இன்று பிற்பகல் 2.20 மணி அளவில் விருதுநகர் ரயில் நிலையம் வந்தடைந்தது.
வந்தே பாரத் ரயிலுக்கான வரவேற்பு நிகழ்ச்சிக்காக விருதுநகர் ரயில் நிலையத்தில் முதலாவது நடை மேடையில் மேடை அமைக்கப்பட்டு எம்.பி. மாணிக்கம்தாகூர், எம்.எல்.ஏ. சீனிவாசன், நகராட்சித் தலைவர் மாதவன் ஆகியோருக்கு சிறப்பு இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், இவர்கள் மூவருமே இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
அதே வேளையில், வந்தே பாரத் ரயில் வரவேற்பு நிகழ்ச்சி விருதுநகரில் இன்று பாரதிய ஜனதா கட்சி விழாபோல் நடைபெற்றது. வி.வி.ஆர். சிலை தொடங்கி, ரயில் நிலையம் வரை உள்ள ரயில்வே பீடர் சாலையில் இருபுறமும் பாஜக கொடி கட்டப்பட்டிருந்தது. அதோடு, ஏராளமான பிளக்ஸ் பேனர்களும் சாலையின் இரு ஓரத்திலும் வைக்கப்பட்டிருந்தன.
ரயில் நிலையத்திற்குள் நடைபெற்ற வந்தே பாரத் ரயிலுக்கான வரவேற்பு நிகழ்ச்சியிலும் ஏராளமான பாஜகவினரே கட்சிக் கொடியுடன் பங்கேற்றனர். பாஜக மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் தலைமையிலான பாஜகவினர், வந்தே பாரத் ரயிலில் வந்த தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், திருநெல்வேலி பாஜக எம்.எல்.ஏ. நைனார் நாகேந்திரன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
அப்போது, பாஜக கொடியுடன் வந்த பாஜக தொண்டர் ஒருவர் திடீரென நடைமேடையிலிருந்து வந்தே பாரத் ரயில் முன் தவறி விழுந்தார். இதனால், லோகோ பைலட்கள் மற்றும் கூடியிருந்தோர் பதற்றமடைந்தனர். அருகிலிருந்த மற்ற பாஜகவினர் உடனடியாக அவரை மீட்ட நடைமேடைக்கு தூக்கிவிட்டனர். இந்நிகழ்ச்சியில், ரயில்வே முதுநிலை கோட்டப் பொறியாளர் சூரியமூர்த்தி உள்பட ரயில்வே துறை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.