ஸ்ரேயாஸ், சுப்மன் கில் அபாரம்: 399 ரன்கள் குவித்தது இந்தியா| Shreyas, Subman Gil Abaram: India scored 399 runs

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

இந்தூர்: ஸ்ரேயாஸ், சுப்மன் கில் அதிரடி சதம் அடிக்க, கேப்டன் லோகேஷ் ராகுல், சூர்யகுமார் அரைசதம் எடுக்க இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றிப்பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டி இன்று (செப்.,24) மத்திய பிரதேசத்தின் இந்தூரில் நடக்கிறது. ‛டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங் தேர்வு செய்தது. இப்போட்டியில் வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா முதலில் களமிறங்கியது. இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா நீக்கப்பட்டு பிரஷித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டார்.

இந்திய அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில் துவக்கம் தந்தனர். ருதுராஜ் 8 ரன்னில் ஹேஷல்வுட் பந்தில் கேட்சானார். அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் அடித்து ஆடினார். பதிலுக்கு சுப்மன் கில்லும் அதிரடி காட்டினார். இந்திய அணி 9.5 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 79 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் போட்டியில் பாதியில் நிறுத்தப்பட்டது.

பிறகு மழை நின்றதைத் தொடர்ந்து போட்டி துவங்கியது. அதிரடி காட்டிய ஸ்ரேயாஸ் 86 பந்துகளில் சதம் அடித்தார். 90 பந்துகளில் 105 ரன்கள் எடுத்த ஸ்ரேயாஸ் அவுட்டானார். சுப்மன் கில் 97 பந்துகளில் 104 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்

இஷான் கிஷான் 31 ரன்களுக்கு அவுட்டானார். கேப்டன் லோகேஷ் ராகுல் தன் பங்கிற்கு வேகம் காட்டினார். அவரும் அரைசதம் அடித்து அசத்தினார். 38 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து அவுட்டானார். சிக்சர், போர் என பந்துகளை பறக்கவிட்ட சூர்யகுமாரும் அரைசதம் அடித்தார். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் எடுத்தது. சூர்யகுமார் யாதவ் 72 ரன்களுடனும் ரவீந்திர ஜடேஜா 13 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

அதிக ரன்கள்

இன்றைய போட்டியில் எடுத்த 399 ரன்களே , ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி எடுத்த அதிகபட்ச ரன்கள் ஆகும்.

200 ரன்

2வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் – சுப்மன் கில் ஜோடி 200 ரன்கள் எடுத்தது.

சாதனை

ஒரு நாள் போட்டிகளில் 35வது இன்னிங்சில் 1,900 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமை சுப்மன் கில்லுக்கு கிடைத்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.