கும்பகோணம்: குவைத்தில் உடல்நலக் குறைவால் உயிரிழந்த கணவரின் உடலைச் சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என மாத்தூரைச் சேர்ந்த இவரது மனைவி வலியுறுத்தியுள்ளார்.
திருவிடைமருதூர் வட்டம், மாத்தூர், அய்யனார்கோயில் தெருவைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் முருகேசன்(50). எலக்டிரிஷியனான இவருக்கு சத்யா(40) என்ற மனைவியும், ஹரிஸ்(8), துர்கா(6) என 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இங்கு போதிய வருமானம் இல்லாததால், கடந்த பிப்ரவரி 17-ம் தேதி குவைத் நாட்டுக்கு வேலைக்காகச் சென்றார். ஆனால் அங்கு உரிய வேலை கிடைக்காததால், கூலி வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 21-ம் தேதி தனது மனைவி சத்யாவிடம் தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதனால் நான் ஊருக்கு வருவதற்கு தேவையான பணம் உடனே அனுப்பினால், 25-ம் தேதி ஊருக்கு வந்து விடுவேன் என்று தொலைப்பேசியில் பேசிவிட்டு, மீண்டும் மாலையில் பேசுகிறேன் எனத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து 23-ம் தேதி, முருகேசனுடன் இருந்த சக நண்பர்கள், முருகேசன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என மனைவி சத்யாவிடம் தெரிவித்தனர்.
இதனையடுத்து, அவரது மனைவி சத்யா, தனது கணவரின் உடலைச் சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மூலம் மேற்கொள்ள வேண்டும், கணவரின் உயிரிழப்பு குறித்து மருத்துவ அறிக்கையைப் பெற்றுத் தரவேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு குறுந்தகவல் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், நாளை காலை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்கவுள்ளார்.