கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை பார்வையிட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்துப் பணிகளும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக தாமதப்படுத்தாமல் முடிக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (செப்.24) கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 8-வது வார்டு, துளசி நகரில் ரூ.1.62 கோடி மதிப்பீட்டில் 2.04 கி.மீ நீளத்துக்கு அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணியினையும், 5வது வார்டு , நஞ்சப்பா நகரில் உள்ள வி.கே.வி நகரில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் 2.21 கிலோமீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணியினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளின் முன்னேற்றம் குறித்து வாரந்தோறும் தலைமைச் செயலாளர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தி, பணி முன்னேற்றம் குறித்த அறிக்கையினை அளிக்குமாறு தமிழக முதல்வர் அறிவுறுத்தியிருந்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 19.9.2023 அன்று தலைமைச் செயலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழக முதல்வர் பேசும் போது, மழைநீர் வடிகால் பணிகள், குடிநீர் வாரியப் பணிகள், மின்வாரியப் பணிகள் என பல்வேறு பணிகள் காரணமாக மட்டுமல்லாமல், பொதுவாக பழைய சாலைகளின் நிலை போதிய பராமரிப்பு இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறார்கள், இந்த நிலை மாற்றப்படவேண்டும் என்றும், நம் மாநில சாலைகள் தரமானதாக, மக்கள் பாராட்டப்படும் வகையில் அமைக்கப்படவேண்டும் என்றும் அன்றைய ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தினார்.
அமைச்சர்களும், அரசு செயலாளர்களும், துறைத் தலைவர்களும் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும், இதனை கள ஆய்வு செய்தும், பணி முன்னேற்றம் கூட்டங்கள் நடத்தியும் உறுதி செய்ய திட்டமிட்டவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும், சுற்றுப்பயணம் செய்ய அனைத்து மாவட்டங்களிலும், இது தொடர்பாக நேரடியாக ஆய்வு செய்ய முடிவு செய்திருப்பதாகவும், சாலைப்பணிகள் மேற்கொள்ளும் துறைகள் அனைத்தும் துரிதமாக, தரமாக பணிகளை மேற்கொண்டு முடிக்கவேண்டும் என்றும் கண்டிப்போடு தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் தமிழக முதல்வர் இன்று (செப்.21) சென்னை, மாநகரில் சாலைப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து , கோயம்புத்தூர் மாநகராட்சியின் சார்பில், மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அதன் விவரங்கள் பின்வருமாறு:
கோயம்புத்தூர் மாநகராட்சி வார்டு எண் 8, துளசி நகர் சாலைப் பணி: மாநகராட்சி வார்டு எண்:8, துளசி நகரில் 2023-24-ஆம் ஆண்டுக்கான மாநில நிதி குழு நிதியின் கீழ் ரூ.1.62 கோடி மதிப்பீட்டில் 2.04 கி.மீ நீளத்துக்கு தார் சாலை அமைக்கப்பட்டு வரும் பணியினை தமிழக முதல்வர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இப்பணிகள் கடந்த 05.09.2023 அன்று தொடங்கப்பட்டு நிறைவுறும் தருவாயில் உள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சி வார்டு எண் 5, நஞ்சப்பா நகர் சாலைப் பணி: அதனைத் தொடர்ந்து, மாநில நிதி குழு நிதியின் கீழ் வார்டு எண்: 5, நஞ்சப்பா நகரில் உள்ள வி.கே.வி நகரில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் 2.21 கிலோமீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வி.கே.வி. நகரில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதற்கு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தமிழக முதல்வருக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்ததோடு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கியதற்கும் தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
சாலைப் பணிகளை ஆய்வு மேற்கொண்ட முதல்வர், அனைத்து பணிகளையும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக தாமதப்படுத்தாமல் முடிக்கப்பட வேண்டும் என்றும், நகராட்சி நிர்வாகத் துறை, நெடுஞ்சாலைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை ஆகிய துறைகளின் அலுவலர்கள், போக்குவரத்து காவல்துறை, மின்வாரியம், குடிநீர் வழங்கல் வாரியம், தொலைதொடர்புத் துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி, சாலைப் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அலுவலர்களை அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.