இந்தூர்,
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட்டும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். முதல் ஓவரில் இரண்டு பவுண்டரிகளை விளாசிய கெய்க்வாட், சிறிது நேரத்தில் ஹேசில்வுட் பந்துவீச்ச்ல் ஆட்டமிழந்தார்.
இதனை தொடர்ந்து சும்பல் கில்லுடன் ஸ்ரேயஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இருவரும் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் பவுண்டரிகளாக விரட்டியடித்தனர். இதனால், இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இருவரின் ரன் வேகத்தை குறைக்க ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் திணறினர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்ரேயஸ் அய்யர் சதமடித்து அசத்தினார். அவர் 86 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் தனது சதத்தை பூர்த்திசெய்தார். தொடர்ந்து, சுப்மன் கில்லும் சதமடித்தார். சதமடித்த சிறிது நேரத்திலேயே (சுப்மன் கில் 104, ஸ்ரேயஸ் அய்யர் 105) இருவரும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அதன் பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் அதிரடி காட்டினர். இஷான் கிஷன் 31 ரன்கள், கே.எல்.ராகுல் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிவந்த சூர்யகுமார் யாதவ் 37 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்சருடன் 72 ரன்கள் குவித்தார்.
இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேமரூன் கிரீன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனை தொடர்ந்து 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய உள்ளது.