சென்னை: திருநெல்வேலி – சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தநிலையில் இந்த ரயில் சேவையை தென் தமிழ்நாட்டின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயில் திட்டம் தொடங்கப்பட்டதற்காக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ரயில் சேவையால், நெல்லையில் இருந்து சென்னைக்கான பயண நேரத்தை 12 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரமாகக் குறைத்துள்ளது. இந்தச் சேவையை தமிழகத்தின் தென் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.
ஒரே நாளில் 9 வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடக்கம்: முன்னதாக, நெல்லை – சென்னை எழும்பூர், விஜயவாடா – சென்னை சென்ட்ரல் உட்பட நாட்டின் 11 மாநிலங்களை இணைக்கும் வகையில் 9 வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.
நாட்டின் அதிவேக சொகுசு ரயிலான வந்தே பாரத் ரயில்கள் சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் இந்த ரயில்கள் மணிக்கு அதிகபட்சமாக 180 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியவை.
டெல்லி – வாரணாசி இடையே முதல் வந்தே பாரத் ரயில் சேவை கடந்த 2019 பிப்.15-ம் தேதி தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 24 வழித்தடங்களில் இந்த சேவை தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் தற்போது 25 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.